அமாவாசையில் பொதுவாக பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மற்றும் பசுக்களுக்கு தானம் கொடுப்பது போன்ற செயல்களை பெரும்பாலும் செய்து வரப்படுகிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி இந்த இரண்டு நாட்களிலும் பிரபஞ்சத்தின் சக்தி அதிகரித்து காணப்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்நேரத்தில் எதை செய்தாலும் அதற்குரிய பலன்கள் முழுமையாக வந்தடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை ஆனி மாதம் வரக்கூடிய இந்த சக்தி வாய்ந்த அமாவாசையில் என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
நாளை சுபகிருது வருடத்தின் ஆனி மாத அமாவாசை நிகழ்கிறது. இந்த அமாவாசை காலை ஆறு நாற்பத்தி நான்கு மணியிலிருந்து மறுநாள் காலை எட்டு முப்பத்தி நான்கு மணி வரையிலும் நீடிக்கிறது. காலையிலிருந்தே அமாவாசை திதி ஆரம்பித்தாலும், நீங்கள் இரவு நேரத்தில் அமாவாசைக்கு உரிய பூஜைகளை செய்வது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இரவு 7 முதல் 8 மணி வரையிலான குரு ஓரையில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். மேலும் வாழ்க்கையில் இருக்கக்கூடிய இன்னல்கள் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த குரு ஓரையில் மஞ்சள் நிறத் துணி ஒன்றை எடுத்து அதில் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பு மற்றும் அதனுடன் ஒரு விரலி மஞ்சளை சேர்த்து, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து முடிச்சாக முடித்துக் கொண்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
பின்னர் குலதெய்வத்தை நினைத்து குல தெய்வ மந்திரத்தை உச்சரித்து குலதெய்வ படம் இருந்தால் அதை வைத்து, படத்தில் முன்பாக, மண் கலசத்தில் தண்ணீர் நிரப்பி வையுங்கள். இதனால் குலதெய்வ அருள் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. காலையில் நீங்கள் அமாவாசை திதியில் வீட்டில் இறந்து போன முன்னோர்களுக்கு படையல் வைத்து அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். தர்ப்பணம் கொடுப்பவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து காலையிலேயே தர்ப்பணம் கொடுத்து விட்டு வாருங்கள்.
இந்நாளில் இல்லாத ஏழை, எளியவர்களுக்கு நீங்கள் செய்யும் வஸ்திர தானம் மற்றும் அன்னதானம் ரொம்பவே சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. செய்த புண்ணியங்களை இரட்டிப்பாக்க கூடிய இந்த அமாவாசை தினத்தை கண்டிப்பாக மறக்காமல் உங்களால் முடிந்த மட்டும் தானங்கள் செய்யுங்கள். ஏழை எளியவர்களுக்கு மட்டுமல்லாமல், பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம் கொடுப்பது, அகத்திக்கீரை கொடுப்பது மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுப்பது போன்றவற்றை செய்தால் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.
காலையில் வீட்டு வாசலில் கோலம் போட கூடாது. சுத்தபத்தமாக முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான எல்லா பொருட்களையும் வைத்து படையல் இட்டு குறிப்பாக அவர்களுக்கு புது வஸ்திரம் வைத்து வழிபட்டு பின்னர் அந்த வஸ்திரத்தை இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பாருங்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி ஓடிவிடும். அந்த அளவிற்கு அற்புதமான சக்தி வாய்ந்த இந்த பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்வது நல்லது. மேலும் இரவு நேரத்தில் வாசலில் விளக்கு ஏற்றி வைப்பது அல்லது மொட்டை மாடியில் அகல் விளக்கு தீபங்களை பச்சரிசி பரப்பி அதன் மீது ஏற்றி வைப்பது போன்றவை இந்த நாளில் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகத் தொடங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. எனவே ஆனி மாத அமாவாசையில் அதன் சிறப்புகளை தெரிந்து கொண்டு வழிபட்டு பலன் பெறலாமே!