இயற்கை என்பது இறைவனால் மனிதர்களுக்காக கிடைத்த ஒரு வரமாகும். இயற்க்கையாய் எவ்வளவோ செடி கொடிகள் தோன்றுகின்றன. அதே போல நம்மை சுற்றி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் இப்படி பல தோன்றி திரிகின்றன. இதுவும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். இந்த உயிரினங்கள் சில சமயங்களில் உங்கள் வீடுதேடி வருவதுண்டு. அவற்றிற்கு எதிர்காலத்தில் வரவிருப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதால் அதனை உங்களுக்கு உணர்த்துவதற்காகவே வீட்டிற்குள் வருகின்றன. இவ்வாறு வீட்டிற்குள் வரும் உயிரினங்களின் மூலம் உங்களுக்கு ஏற்படும் பலன் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வீட்டில் தெய்வ சக்தி நிறைந்து இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நன்மையே அதிகமாக நடக்கும். வீட்டில் உள்ளவர்களை எந்த ஒரு தீய சக்தியும் நெருங்குவதில்லை. உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை தெரிந்து கொள்வதற்கும் இந்த உயிரினங்கள் துணைபுரிகின்றன. புதிதாக வீடு கட்டி குடியேறும் பொழுது ஏதேனும் ஒரு உயிரினத்தை உடன் கொண்டு சென்றாரல் அவைகளிடம் இருக்கும் ஜீவசக்தியின் மூலம் தெய்வ சக்தியும் அவைகளுடனே வந்துவிடும்.
வீட்டிற்குள் வரும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்:
அதிர்ஷ்டம் உண்டாக்கும் உயிரினங்கள்:
சிட்டுக்குருவி வீட்டிற்குள் அரிதாகவே நுழையும். அவற்றை விரட்டி விடுவது என்பது நல்லதல்ல. இவை உங்கள் வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. அனைவரும் ஆந்தையை எப்பொழுதும் ஒரு வித பயத்துடன் தான் பார்க்கின்றோம். ஆந்தை லட்சுமிதேவியின் அருகில் இருக்கும் ஒரு உயிரினமாகும். வட மாநிலங்களில் உள்ள லட்சமிதேவியின் வாகனமாகவும் ஆந்தை இருக்கிறது. இத்தகைய ஆந்தை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வரப்போகிறது. எனவே பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பொன்வண்டு, வண்ணத்துப்பூச்சி, கிளி, குளவி, தட்டான் போன்றவை உங்கள் வீட்டிற்குள் நுழைவதன் மூலமும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வந்தடையும். ஒரு சிலர் பல்லிகளை பார்த்தாலே அடித்து விடுவார்கள். ஆனால் பல்லிகள் வீட்டுக்குள் இருப்பதால் அந்த வீடு மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் ஒரு பல்லி கூட இல்லை என்றால் உங்கள் வீட்டில் பணம் கரைந்துகொண்டே போகப்போகிறது என்று அர்த்தம்.
உங்கள் வீட்டில் இருக்கும் பீரோவிற்கு பின்னால் பல்லிகள் இருந்தால் உங்களுக்கு செல்வம் வந்து சேரப்போகிறது என்று அர்த்தமாகும். புறா உங்கள் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகிறது. எனவே பறவை இனங்களை உங்கள் வீட்டிற்குள் வரவழைக்க அவைகளுக்கு தினமும் தானியங்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

துரதிர்ஷ்டம் உண்டாக்கும் உயிரினங்கள்:
பாம்பு, பூரான், தேள் போன்ற விஷதன்மை உடைய பூச்சிகள் வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு துரதிர்ஷ்டம்தான் உண்டாகும். அவை உங்களுக்கு ஏதேனும் ஒரு தீமை நடக்கப்போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாகவே உங்கள் வீட்டிற்குள் வருகின்றன. குரங்கு உங்கள் வீட்டுக்குள் நுழைவதால் உங்களுக்கு தீங்கு தரக்கூடிய எதிரிகள் உங்கள் அருகில் இருப்பதாகவோ, அல்லது வீட்டிற்கு அவர்கள் வரப்போகிறார்கள் என்றோ அர்த்தமாகும். ஆமைகள் வீட்டிற்குள் நுழைவது துரதிருஷ்டத்தை உண்டாக்குகிறது. கரையான் வீட்டிற்குள் நுழைவதும் உங்களுக்கு துரதிருஷ்டம் தான். உங்களின் செல்வ நிலை குறைந்து தொழிலில் நஷ்டம், பணப் பிரச்சனை போன்றவை உண்டாக போவதாக அர்த்தமாகும்.