புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய அமாவாசை என்று கூறுவோம். அன்றைய தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பல தடைகளை நீக்கும். முன்னோர்களின் சாபம் ஏற்பட்டு விட்டால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட முன்னோர் சாபத்தை நீக்குவதற்கு மஹாளய அமாவாசை அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்
நம்முடைய முன்னோர்களை நினைத்து ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு ஏற்பட்டிருக்கிற சாபமாக இருந்தாலும் முன்னோர்களால் ஏற்பட்ட சாபமாக இருந்தாலும் அந்த சாபம் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்கு உரிய காரியங்களை செய்ய முடியாது என்பவர்கள் வருடத்தில் சில முக்கியமான அமாவாசை நாட்களில் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட முக்கியமான அமாவாசை நாட்களில் ஒன்றுதான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை. அன்றைய தினத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானத்தை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்கள் ஏதாவது ஒரு பருப்பை தானமாக தர வேண்டும் அல்லது பருப்பு சாதம் தானமாக தரலாம். வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு ஆடை வாங்கி தானமாக தர வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு வஸ்திரதானம் தருவதும் சிறப்புக்குரியதாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சையை தானமாக தர வேண்டும். புளி சாதத்தை தானமாக தர வேண்டும். படிப்பிற்காக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
மிதுன ராசிக்காரர்கள் பச்சைப் பயிரை தானமாக தரவேண்டும். அதேபோல் பேரிக்காயையும் தானமாக தரவேண்டும். வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவத்திற்குரிய உதவிகளை செய்ய வேண்டும். கடக ராசிக்காரர்கள் பச்சரிசியை தானமாக தரவேண்டும். சர்க்கரை பொங்கல், உப்பு, பருப்பு போன்றவற்றை தானமாக தருவது சிறப்பு. படிப்பிற்கு உதவி செய்வது நன்மையை தரும்.
சிம்ம ராசிக்காரர்கள் கோதுமையை தானமாக தரவேண்டும். கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும் தானமாக தரலாம். பொரி, அவல், கடலையை தானமாக தர வேண்டும். ஆடை தானம் சிறப்புக்குரியதாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் பாசிப்பருப்பை தானமாக தர வேண்டும். பாசிப்பருப்பு பாயாசம் செய்து தரலாம். சிறு குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்கலாம். வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு மளிகை பொருட்கள் வாங்கித் தரலாம்.
துலாம் ராசிக்காரர்கள் பால் தானம் தர வேண்டும். கொண்டைக்கடலை, தேங்காய் தானம் செய்வது சிறப்புக்குரியதாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் நெய் தானம் தர வேண்டும். ஏதாவது ஒரு பருப்பு வகையை தானமாக தர வேண்டும். ஆடை தானம் செய்ய வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடையை தானம் தரவேண்டும். நீர் தானம் செய்ய வேண்டும். தங்கள் கைகளால் செய்த இனிப்பு பண்டங்களை தானமாக தர வேண்டும்.
மகர ராசிக்காரர்கள் எள் தானம் செய்ய வேண்டும். வெல்லம், பாகற்காய் போன்றவற்றையும் தானம் செய்ய வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் கலவை சாதத்தை தானம் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கலையும் தானம் செய்ய வேண்டும். ஆடை தானம் சிறப்பு மிகுந்தது. மீன ராசிக்காரர்கள் மோர் தானம் செய்ய வேண்டும். நீர், கொண்டைக்கடலை, ஏதாவது ஒரு இனிப்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.
பொதுவாகவே எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்வதன் மூலம் முன்னோர்களின் சாபம் தோஷம் அனைத்தும் நீங்கும், புண்ணியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மஹாளய பட்சம் 9ஆவது நாள் சிறப்பு பரிகாரம்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களால் இயன்ற பொருட்களை இந்த முறையில் முன்னோர்களை நினைத்து அமாவாசை தினத்தில் தானம் செய்து முன்னோர்களின் அருள் ஆசியை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.