கமகமக்கும் ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு எப்படி வைப்பது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?

pagrkai-kuzambu

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் இந்த பாகற்காயை செய்தாலே எல்லோரும், எட்டடி தூரம், எட்டி ஓடி விடுவார்கள். காரணம் இதில் இருக்கும் கசப்பு தன்மை தான். ஆனால் இந்த கசப்பு தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை சுவையாக வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆந்திரா ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு ரெசிபி உங்களுக்காக!

pagrkai-kuzambu1

முதலில் 1 பெரிய பாகற்காயை வட்ட வடிவமாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி நன்றாக தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இந்த பாகற்காயை அதில் போட்டு 1/2 ஸ்பூன் அளவு உப்பை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

மற்றொரு கடாயில் 1 – டேபிள் ஸ்பூன் எள், 1 – ஸ்பூன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம். ட்ரை ப்ரை செஞ்சுக்கோங்க. இந்த 2 பொருட்கள் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

ellu

பெரிய சைஸ் வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பெரிய அளவில் தக்காளிப்பழம் – 1 பொடியாக நறுக்கியது, பூண்டு பல் – 6 தோலுரித்து ஒன்றும் இரண்டுமாக நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குழம்பை தாளிக்க செல்வோம்.

puli-karaisal

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

pagrkai-kuzambu3

வெங்காயமும் பூண்டும் வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு இதை தொக்கு பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இவைகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை கடாயில் சேர்த்து விடுங்கள்.

pagrkai-kuzambu4

புளித்தண்ணீரை ஊற்றி இரண்டு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் பாகற்காயை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இந்த இடத்தில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் எள்ளு பொடியை சேர்த்து கலந்து விட்டு ஒரு மூடி போட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்தால் கமகமக்கும் ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு தயார்.