ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடினமாக உழைப்போம். அப்படி உழைத்தும் சில பேருக்கு அந்த ஆசைகள் நிறைவேறாமலேயே சென்று விடும். அனைத்துவித தகுதிகள் இருந்தும் அந்த ஆசைகளுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டும் அந்த ஆசைகள் நிறைவேறாமல் சென்றுவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் அவர்கள் விரும்பியது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு
என்றும் சிரஞ்சீவியாக நீக்கமர நிறைந்திருக்கக்கூடிய எல்லைகளை இல்லாத தெய்வமாக திகழக்கூடியவர்தான் ஆஞ்சநேயர். இவருக்கு பல பெயர்கள் இருந்தாலும் எந்த பெயரை சொல்லி அழைத்தாலும் ஓடோடி வருவாரோ இல்லையோ ஆனால் ராமா என்று கூறினால் ஓடோடி வந்து விடுவார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ராம பக்தராக திகழக் கூடியவர் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். இந்த 11 நாட்களும் அசைவத்தை தவிர்ப்பது நல்லது. வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை நல்ல நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு வெற்றிலையும் ஒரு ஒரு ரூபாய் நாணயமும் இருந்தால் போதும். வெற்றிலை கிழியாத அழுகாத நல்ல வெற்றிலையாக இருக்க வேண்டும்.
ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதேபோல் வெற்றிலையும் தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் எந்த காரியத்தை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்கிறீர்களோ அந்த காரியத்தை பேனாவை பயன்படுத்தி வெற்றிலையில் எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் பொழுது வெற்றிலை கிழியக்கூடாது. அப்படி கிழிந்தால் புதிதாக வேறொரு வெற்றிலையை எடுத்து எழுதிக் கொள்ள வேண்டும்.
பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தில் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான செந்தூரப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களுடைய இடது கையில் வெற்றிலையை வைத்து அதற்கு நடுவில் செந்தூரப் பொட்டு வைத்த ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு பூஜை அறையில் ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை ஆஞ்சநேயரிடம் மனதார கூற வேண்டும்.
குறைந்தபட்சம் 15 நிமிடமாவது அவரிடம் உங்களுடைய கோரிக்கையை நீங்கள் சொல்ல வேண்டும். இப்படி சொல்லி முடித்துவிட்டு ஒரு சிறிய நூலை வைத்து வெற்றிலையை சுருட்டி நாணயம் கீழே விழுகாத அளவிற்கு கட்டி ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 11 நாட்கள் 11 வெற்றிலை 11 ஒரு ரூபாய் நாணயம் என்று வைத்து ஆஞ்சநேயரை ஒரே காரியத்தை நினைத்து வழிபாடு செய்து அவரையும் பாதங்களில் வைக்க வேண்டும்.
11 நாட்கள் முடிந்த பிறகு இவை அனைத்தையும் எடுத்து அதில் இருக்கக்கூடிய நாணயங்களை ஆஞ்சநேயரின் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். வெற்றிலையை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். நீங்கள் நினைத்த காரியம் 11 நாட்கள் முடிவதற்குள்ளாகவே நடந்து விட்டால் தொடர்ந்து 11 நாட்களும் அந்த வழிப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். நடுவிலேயே நிறுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே காரியத்தை நினைத்து தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற மந்திரம்
மிகவும் எளிமையான தெய்வமாக திகழக்கூடிய ஆஞ்சநேயரை இப்படி எளிமையான முறையில் எந்தவித மந்திரங்களும் கூறாமல் 11 நாட்கள் மட்டும் வழிபட நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.