பண நஷ்டம் ஏற்படாமலும், பண நஷ்டத்தில் இருந்து மீளுவதற்கும் மிக எளிய பரிகாரம் இதோ.

panam

நாம் இந்த உலகில் வாழ்வதற்கு காற்று, உணவு எந்த வகையில் அவசியமானதாக இருக்கிறதோ, அதற்கு நிகராக பணம் எனப்படும் செல்வம் திகழ்கிறது. சொல்லப்போனால் தற்காலத்தில் நாம் அனைவரும் உயிர் வாழ்வதை நிர்ணயிப்பதே பணம் என்றாகிவிட்டது. பணத்தை பெரும்பாலானவர்கள் இரண்டு வழிகளில் தான் ஈட்டுகின்றனர் ஒன்று ஏதாவது ஒரு இடத்தில் தின அல்லது மாத சம்பளத்திற்கு பணி செய்து பணம் ஈட்டுவது அல்லது தொழில், வியாபாரம் செய்து அதன் மூலம் பணம் ஈட்டுவது. இந்த இரண்டு முறைகளில் பணம் ஈட்டுபவர்களுக்கும் வாழ்வில் சில சமயங்களில் பண விரையம் அல்லது பண நஷ்டங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இத்தகைய பண நஷ்டம் நமக்கு ஏற்படாமல் அந்த நஷ்டங்களிலிருந்து விரைவில் மீள்வதற்கான எளிய பரிகார முறைகள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

money

வாழ்க்கையில் நாம் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து சிறிது காலத்தில் நம்மில் பெரும்பாலோனோர் மீண்டு வந்து விடுகிறோம். ஆனால் அன்றாட வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமான பண நஷ்டம் ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது என்பது அனைவருக்கும் எளிதில் இயலாத காரியம் ஆகும். இத்தகைய பண நஷ்டம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் பேராசை தான். அதிக அளவில் செல்வம் ஈட்டுவதற்காக தங்களிடம் ஏற்கனவே இருக்கின்ற செல்வத்தை தங்களுக்கு தெரியாத, நம்பகத்தன்மை இல்லாத விடயங்களில் முதலீடு செய்தல், வீண் பகட்டிற்காக வரவுக்கு மீறி செலவு செய்தல் போன்ற காரணங்களாலேயே ஏற்படுகின்றது. மேற்கூறிய இரண்டு செயல்களை பெரும்பாலானவர்கள் செய்யாமல் இருந்தாலே அவர்களுக்கு வாழ்வில் பெரிய அளவிலான பண நஷ்டம் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். ஆனால் இது எதையுமே செய்யாமலும் சிலருக்கு அவர்களின் கர்மவினையை காரணமாகவும் பண நஷ்டம் ஏற்படுகின்றது. இப்படி பணம் நஷ்டத்தால் வாழ்க்கை நடத்துவதற்கு சிரமப்படுபவர்களுக்கு அந்த கஷ்டத்திலிருந்து விடுபட நமது முன்னோர்கள் தங்கள் அனுபவத்தில் பயனடைந்த சில தாந்திரீக பரிகார முறைகளை கூறியிருக்கின்றனர். அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

தங்களுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் முடிந்தவரை தங்கள் வாழ்வில் நேர்மையான வழிகளிலேயே பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும். தீயவழிகளில் பணம் சம்பாதிக்கும் சிலர் நன்றாக வாழ்வது போல் நமக்குத் தெரிந்தாலும், அவர்களின் கெட்ட நேரம் வருகின்ற சமயத்தில் அவர்கள் தீய வழியில் சம்பாதித்த பணம் மட்டும் அல்லாது அவர்கள் அதற்கு முன் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வமும் சேர்ந்து கரைந்துவிடும். நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் செல்வம் சிறிது, சிறிதாக சேர்ந்தாலும் அது நிலைத்து நிற்க செல்வத்தின் கடவுளான லட்சுமிதேவி அருள் புரிவாள்.

tulasi-pariharam

தங்கள் வீடுகளில் செல்வம் கரையாமல் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு தொட்டியில் துளசி செடியை வளர்த்து, அதற்கு செவ்வாய், வெள்ளி பௌர்ணமி போன்ற தினங்களில் சுத்தமான நாட்டு பசுநெய் தீபமேற்றி வழிபடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் சுமங்கலிப்பெண்கள் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் அந்த வீட்டிற்கு பெரிய அளவில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படாமல் செல்வம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

- Advertisement -

lakshmi-money

வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் காலையில் குளித்து முடித்ததும், உடலில் ஈரம் இல்லாதவாறு துடைத்து முடித்து, தூய்மையான ஆடை அணிந்து முதலில் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் லட்சுமி தேவியின் படத்தை முன்பாக சென்று, கைகூப்பி லட்சுமிதேவியை வணங்கிய பிறகு உங்களின் வழக்கமான இறைவழிபாடு மற்றும் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருட்பார்வை என்றென்றும் கிடைத்து பொருளாதார ரீதியில் பெரிய நஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும்.

ashta-lakshmi

தங்கள் வீட்டிற்கு செல்வக் கடவுளான லட்சுமி தேவியின் கடாட்சம் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்கள் வீடுகளில் தேவையற்ற குப்பைகளையும், குறிப்பாக உடைந்துபோன எந்தவிதமான பொருட்களையும் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

valampuri-sangu

லட்சுமி தேவியின் நாயகன் “நாராயணன்” எனப்படும் “திருமால்” ஆவார். வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பாக, சிறிய அளவு வலம்புரி சங்கில் தூய்மையான நீரை ஊற்றி, அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு லட்சுமிதேவி படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு செய்வதாலும் திருமால், லட்சுமி ஆகிய இரு தெய்வங்களின் அருளும் உங்களுக்கு கிடைத்து, உங்கள் வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்து நிற்க வழிவகை செய்யும்.