அரைக்கீரை கடையல் அரைமணியில் பசுமை மாறாமல் எப்படி செய்வது? சுவையான எளிய அரைக்கீரை பருப்பு கடையல்!

arai-keerai-paruppu-kadaiyal
- Advertisement -

எல்லா கீரை வகைகளுக்கு முதன்மையாக விளங்கும் இந்த அரைக்கீரையை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கீரை பெயரை கேட்டால் முழிப்பவர்களுக்கு கூட அரைக்கீரையை மட்டும் நன்றாக தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே சுலபமாக கிடைக்கக்கூடிய இந்த அரைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை. இவை நமக்கு முழுமையாக கிடைக்க பசுமை மாறாமல் அரைமணியில் ரொம்பவே சுலபமாக எப்படி சுவையாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அரைக்கீரை செய்ய தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – ஒரு கட்டு, பாசிப்பருப்பு – 100g, பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பூண்டு பற்கள் – 5, பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

அரைக் கீரை செய்முறை விளக்கம்:
அரைக்கீரை கடையல் செய்வதற்கு முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து பிரஷ்ஷான பூச்சிகள் அரிக்காத கீரைகளாக ஆய்ந்து நான்கைந்து முறை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பு 100 கிராம் அளவிற்கு சிறு பருப்பை அலசி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு அரை மணி நேரம் நன்கு ஊறிய பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி களைந்த பருப்பை சேர்த்து வேக விடுங்கள். அதற்குள் மற்ற காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பாசி பருப்பு பாதி அளவிற்கு நன்கு வெந்து வந்ததும் நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தையும் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை மட்டும் சேருங்கள். மீதமிருக்கும் மிளகாய்களை தாளிக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளலாம். பூண்டுப் பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகம் ஒன்றிரண்டாக இடித்து சேருங்கள். கீரை மற்றும் காய்கறி வகைகள் நன்கு வெந்து ஒன்றோடு ஒன்றாக மசிய வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறிய பின்பு மத்து வைத்துக் கடையலாம் அல்லது நீங்கள் மிக்ஸி ஜாரை பயன்படுத்தி அதில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் இதற்கு தேவையான ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அதற்கு தேவையான ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து தாளித்து கீரையுடன் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க ரொம்பவே எளிமையாக சுவையான பசுமை மாறாத அரைக்கீரை கடையல் தயார்! இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -