திருப்பதி தேவஸ்தான புளியோதரையை இப்படித்தான் செய்வாங்களா? இதனால் தான் பெருமாள் கோவில் புளியோதரை அத்தனை சுவையாக இருக்கு.

puli-sadam_tamil
- Advertisement -

திருப்பதியில் பெருமாளுக்கு செய்யக்கூடிய தேவஸ்தான புளியோதரை பிரசாதம் ரெசிபி தான் இது. சரியான அளவுகளில் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி உங்களுடைய வீட்டில் புளியோதரை செய்து பாருங்கள். திருப்பதி பெருமாள் கோவிலில் கொடுக்கும் புளியோதரையின் சுவை அப்படியே கிடைக்கும். கோவில் புளியோதரை பிரியர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் ரெசிபி.

400 கிராம் அரிசியை எடுத்து, வேக வைத்து, சாதம் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். 400 கிராம் அரிசிக்கு பின் சொல்லக்கூடிய மற்ற பொருட்களின் அளவு சரியாக இருக்கும். குறிப்பாக கோவில் பிரசாதம் என்றால் அதை பச்சரிசியில் தான் செய்வார்கள். விருப்பம் என்றால் நீங்கள் பச்சரிசியில் செய்யலாம். இல்லை என்றால் புழுங்கல் அரிசியிலும் இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம்.

- Advertisement -

2 கப் அளவு வடித்த சாதம், உதிரி உதிரியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வடித்த சாதத்தை ஒரு பெரிய தாம்பூல தட்டில் கொட்டி 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை அதில் ஊற்றி கலந்து அப்படியே ஆற வைத்து விடுங்கள். 65 கிராம் அளவு கொட்டை நீக்கப்பட்ட புளியை சுடுதண்ணீரில் போட்டு, ஊற வைத்து கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெந்தயம் – 1 1/2 ஸ்பூன், மிளகு – 2 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு முதலில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். வெந்தயம் மிளகு முக்கால் பாகம் வறுபட்டு வந்த பிறகு சீரகம் – 2 ஸ்பூன் சேர்த்து லேசாக வறுத்து உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். ஏனென்றால் சீக்கிரம் சீரகம் கருகிவிடும். வறுத்த இந்த 3 பொருட்களையும் அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெய் – 180 ml ஊற்ற வேண்டும். அது காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து, கருவேப்பிலை – 3 கொத்து,  பெருங்காயம் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து கரைத்து வைத்திருக்கும் புளியை இதில் ஊற்றி, 2 டேபிள்ஸ்பூன் அளவு உப்பு போட்டு, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மிளகு சீரக பொடியை கொட்டி கலந்து, இதை மிதமான தீயில் சரியாக 20 லிருந்து 25 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். புளியின் பச்சை வாடை நீங்க எண்ணெய் பிரிந்து சூப்பராக புளி தொக்கு தயாராகி இருக்கும். (இடையிடையே திறந்து கலந்து விட வேண்டும். அடிபிடித்து விடும் ஜாக்கிரதை. அடுப்பை சிம்மில் கூட வைத்துக் கொள்ளலாம்.)

இப்போது நன்றாக ஆறிய சாதத்தில் இந்த புளியோதரை கரைசலை ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக 1 ஸ்பூன் நெய்யில் 15 முந்திரி பருப்பை போட்டு வறுத்து புளியோதரை மேலே தூவி விடுங்கள். அவ்வளவுதான் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு புளியோதரை சாதம் சூப்பரான கோவில் புளியோதரை ருசியில் உங்களுக்கு கிடைத்துவிடும்.

பின்குறிப்பு: இதில் பச்சை மிளகாய், வர மிளகாய், என்று எந்த ஒரு பொருளையும் நாம் சேர்க்கவில்லை. எள்ளு கூட சேர்க்கவில்லை. ஆனாலும் இதன் ருசி வித்தியாசமாக சூப்பராக இருக்கும். தேவஸ்தானத்தில் இப்படித்தான் புளியோதரை செய்வார்கள். அரிசி மட்டும் குழைந்து விடக்கூடாது. பக்குவம் தவறிவிடும். உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -