ஆவணி ‘ஞாயிறு’ விரதம் யாரெல்லாம் மேற்கொள்ளலாம்? அன்றைய நாளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதன் ரகசிய காரணம் என்ன?

suryan-nagar
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிடாமல் நம்மால் இருக்கவே முடியாது. அசைவப் பிரியர்கள் எந்த நாளில் அசைவம் சாப்பிடாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையை மட்டும் விட்டுவிட மாட்டார்கள். அசைவம் சாப்பிட்டால் தான் அன்றைய நாளே முழுமை அடையும் என்பது போல் ஒரு மனப்போக்கு நம்மிடம் உண்டு. அப்படியிருக்க இந்த ஆவணி ஞாயிறு அன்று மட்டும் ஏன் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்கள் கிடைக்கும்? யாரெல்லாம் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

Lord sooriyan

சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் பக்தர்களால் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆடி மாதத்திற்கு வெள்ளிக்கிழமை எவ்வளவு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது? அது போல் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த நாளில் சூரியனை வணங்குபவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியும், நிறைய நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம். அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம்.

eye

சூரியன் ஜாதகத்தில் சில லக்னங்களில் நீசம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அது போன்றவர்கள் ஆவணி ஞாயிறு விரதத்தை மேற்கொள்ளலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் ஆவணி ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கலாம்.

- Advertisement -

ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் ஏதும் உண்ணாமல் திரவ உணவுகளை எடுத்துக் கொண்டு அதிகாலை 6 லிருந்து 7 மணிக்குள் சூரிய பகவானை வணங்க வேண்டும். ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் 6 லிருந்து 7 மணி வரை சூரிய ஓரை தான் இருக்கும். இந்த நேரத்தில் நாம் வணங்கும் பிரார்த்தனைகள் சூரிய பகவான் நமக்கு பலிக்க செய்வார் என்பது ஐதீகம்.

sun

சூரியன் உதயமாகும் கிழக்கு திசை நோக்கி அன்றைய நாளில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய மந்திரங்கள், சூரிய காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரித்து சூரியனின் அருளை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை வாசித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

- Advertisement -

lotus

ஆவணி ஞாயிற்றுக் கிழமையில் கோவிலுக்கு சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனாருக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அன்றைய நாளில் கோதுமையால் செய்த இனிப்பு வகைகளை நைவேத்யம் செய்யலாம். மேலும் கோதுமையை பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். இதனால் ஒவ்வொருவர் குடும்பத்திலும் பிரச்சனைகள் நீங்கி சுபீட்சமான வாழ்வு அந்த வருடத்தில் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

wheat

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எவரொருவர் ஆவணி மாத சூரிய விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு தீராத துன்பங்கள் எல்லாம் தீரும். நீங்காத நோய்களெல்லாம் நீங்கும். வற்றாத செல்வங்கள் வந்து சேரும். ஆவணி மாதத்தில் வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து, கோதுமை தானம் செய்து வரலாம். மிகவும் எளிய சக்தி வாய்ந்த இந்த சூரிய விரதத்தை நீங்களும் கடைப்பிடித்து நலம் பெறலாம் என்பதை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
புது வீட்டிற்கு குடிபோகும் போது, எக்காரணத்தைக் கொண்டும் முதன்முதலாக, இந்த ஒரு பொருளை மட்டும் எடுத்துகொண்டு போகவே கூடாது. அது தரித்திரத்தை தான் தேடித்தரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -