தேங்காய் சேர்க்காமல் அவரைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள், குழந்தைகள் கூட வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

avaraikkai-poriyal
- Advertisement -

அவரைக்காயில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடி பிரச்சனையை விரைவாக சரி செய்கிறது. எனவே அடிக்கடி அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். ஆனால் அவரைக்காய் என்றாலே பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அவரைக்காய் என்றாலே சாப்பாடு இறங்காது. ஆனால் இந்த முறையில் ஒருமுறை அவரைக்காயை சமைத்துக் கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு துண்டு அவரைக்காய் கூட மிஞ்சாது, எல்லாமே காலியாகிவிடும். அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

avarakai

அவரைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
அவரைக்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 4, மிளகு தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வறுத்த வேர்க்கடலை – அரை கப். எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

அவரைக்காய் பொரியல் செய்முறை விளக்கம்:
அவரைக்காய் பொரியல் செய்ய முதலில் அவரைக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு முனைகளையும் வெட்டி நரை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவரைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும். எல்லா அவரைக்காய்களையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலையை வெறும் வாணலியில் 5 நிமிடம் லேசாக வறுத்து தோலை உதிர்த்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருந்தாலும் அதனை ஒரு முறை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

verkadalai

பின்னர் மிக்ஸியில் வறுத்த வேர்கடலை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வரும் சமயத்தில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் கறிவேப்பிலையை உருவிப் போட்டு, வர மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் சமயத்தில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள அவரைக்காய்களை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவரைக்காய்க்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து லேசாக வதக்கி வாருங்கள். அவரைக்காய்க்கு உப்பை கொஞ்சம் குறைத்தே சேர்க்கலாம்.

avaraikkai-poriyal1

அவரைக்காய் சீக்கிரம் வெந்து விடும் எனவே அதிகம் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. ஒரு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை தெளித்து மூடி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடத்தில் அவரைக்காய் வெந்து தண்ணீர் வற்றி பொலபொலவென வந்துவிடும். அதில் நீங்கள் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியை சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். இதில் வேர்க்கடலை பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் விரும்பாதவர்கள் இப்படி வேர்க்கடலை பொடியை சேர்த்து செய்யும் பொழுது அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையில் அவரைக்காயை செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள், முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -