பீட்ரூட்டில் பல சத்துக்கள் இருக்கின்றன. பீட்ரூட்டை நம்முடைய உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட பீட்ருட்டை யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படி விரும்பி சாப்பிடாதவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான செய்முறை தான் பீட்ரூட் வடை.
பீட்ரூட் வடையை மிகவும் எளிதில் செய்துவிடலாம். இதற்காக எந்த பருப்பையும் ஊற வைக்க வேண்டிய அவசியமே இல்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே சேர்த்து செய்யலாம். அதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – 1
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- பொட்டுக்கடலை – ஒரு கப்
- அரிசி மாவு – ஒரு கப்பு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பீட்ருட்டை நன்றாக உரசிக்கொள்ளுங்கள். பீட்ரூட்டை ஒரு பவுலில் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நெறுநெறு என்று அரைத்து கொள்ள வேண்டும். துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவில் இருந்து நான்கு டேபிள் ஸ்பூன் அளவு முதலில் சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். அதே போல் அரிசி மாவிலும் நான்கு ஸ்பூனை எடுத்து போட்டு கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் தெளிக்க கூடாது. பீட்ரூட் மற்றும் வெங்காயத்தில் இருக்கக்கூடிய தண்ணீரே போதும். மாவு இன்னும் தண்ணீராக இருந்தால் பொட்டுக்கடலை மாவையும் அரிசி மாவையும் மறுபடியும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லை என்றால் அதை நன்றாக பிணைந்து வடை மாவாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இந்த மாவை உருட்டி வடை போலவோ அல்லது உருண்டை வடிவத்திலோ செய்து எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு இரண்டு புறமும் நன்றாக சிவக்க விட்டு எடுத்து விட வேண்டும்.
எண்ணெயில் பொறிக்கக்கூடாது அல்லது டயட்டில் இருக்கிறோம் என்பவர்கள் இதையே கட்லெட் போல தயார் செய்து தோசை கல்லை வைத்து அதில் போட்டும் பிரட்டி எடுக்கலாம். இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்களாகவும் அதே சமயம் சுவை மிகுந்த பொருட்களாகும் திகழ்வதால் நினைத்த மாத்திரத்திலேயே இந்த பீட்ரூட் வடையை நம்மால் செய்ய முடியும்.
இதையும் படிக்கலாமே பலாப்பழ இட்லி செய்முறை
மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த பீட்ரூட் வடையை செய்து கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வீட்டுக்கு சாப்பிட வைத்து விடலாம்.