இந்த குறிப்பை தெரிந்து கொள்வதற்கு முன்பு, பிரம்மி இலை என்றால் எது என்பதை தெளிவு படுத்திக் கொள்வோம். நம்முடைய ஊர்களில் பிரம்மி என்று சொல்லப்படக்கூடிய கீரை வல்லாரைக் கீரை. வல்லாரை கீரை பார்ப்பதற்கு அகல அகலமான இலைகளாக இருக்கும். வட்ட வடிவில் இருக்கும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க இந்த கீரையை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் வடநாடுகளில் பிரம்மி என்று சொல்லக்கூடிய இலை சின்ன சின்ன இலைகளாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். கேரளாவில் உள்ளவர்கள் இந்த சிறிய இலை உள்ள பிரமியை தான் தலை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இப்படி சின்ன சின்ன இலைகளை கொண்ட செடி வகையை நம்முடைய ஊர்களில் ‘நீர் பிரம்மி’ என்றும் சொல்லுவார்கள்.
முடி வளர்ச்சியை அதிகப்படுத்த வட்ட வடிவில் இருக்கக்கூடிய இந்த வல்லாரை இலைகளையும் பயன்படுத்தலாம். சின்ன சின்ன இலைகளைக் கொண்ட நீர் பிரம்மியையும் முடி வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக பிரம்மி, நீர் பிரம்மி இரண்டுமே முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு தாவர வகை தான். ஆனால் குறிப்பாக கேரளாவில் உள்ள மக்கள் இந்த சிறிய இலையை கொண்ட நீர் பிரம்மியை தான் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் பார்க்கப் போகும் குறிப்பும் இந்த நீர் பிரம்மி இலைகளை வைத்து தான்.
இந்த நீர் பிரம்மி செடி எங்கு கிடைக்கும். எந்த இடத்தில் நீர் வரத்து அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் இந்த நீர் பிரம்மி செடி பரவலாக வளர்ந்து கிடக்கும். அந்த செடியில் இருந்து சில கிளைகளை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இலைகள் காம்புகள் இரண்டும் சேர்ந்து நம்முடைய குறிப்புக்கு பயன்படும். உங்களுடைய முடிவுக்கு தேவையான அளவு நீர் பிரம்மி செடியை பறித்து நன்றாக தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
அதன் பின்பு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்தால் ஒரு விழுது நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை உங்களுடைய தலையில் அதாவது மயிர் கால்களில் படும் படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் இரண்டு நாள் இந்த நீர் பிரம்மி இலையை அரைத்து உங்களுடைய தலையில் ஹேர் பேக் போட்டு வர, தலைமுடி உதிர்வு குறையும். தலைமுடி அடர்த்தியாக வளரத் தொடங்கும். கேரளாவில் உள்ளவர்கள் இந்த நீர் பிரம்மி இலையை தான் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த நீர் பிரம்மி இலை பொடியாகவும் நமக்கு கிடைக்கின்றது. அந்த பொடியை வாங்கி தேங்காய் எண்ணெயில் போட்டு ஏழு நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பொடியில் இருக்கக்கூடிய சத்து அனைத்தும் அந்த தேங்காய் எண்ணெயில் இறங்கி இருக்கும். அதன் பின்பு எண்ணெயை நன்றாக வடிகட்டி விட்டு இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தாலும் தலை முடி வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த நீர் பிரம்மி இலை கிடைத்தாலும் சரி அல்லது பொடியாக வாங்கியும் பயன்படுத்தினாலும் சரி, முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டு குறிப்புகளுமே மிக மிக நல்லது. இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. வளராத தலையில் கூட முடி வளரும்.
பின்குறிப்பு: ‘பிரம்மி’, ‘நீர் பிரம்மி’ இந்த இரண்டு இலைகளுக்கும் வித்தியாசம் புரிகிறதா? வட்ட வடிவில் நம்முடைய ஊர்களில் கிடைக்கக்கூடிய வல்லாரைக் கீரையின் பெயர் ‘பிரம்மி’ தான். சின்ன சின்ன இலைகளில் வெள்ளைப் பூக்கள் பூக்கும் தாவரத்தை நம்முடைய ஊர்களில் ‘நீர் பிரம்மி’ என்று சொல்லுவார்கள். ஆனால் மற்ற மொழி பேசுபவர்கள், வடநாடுகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு இலையையுமே பிரம்மி என்று சொல்லுவதால் நமக்கு ஏற்பட்ட குழப்பம் தான் இது. ஆனால் இந்த இரண்டு தாவரத்திற்கும் உள்ள குணாதிசயங்களும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதும் ஆச்சரியத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் தான். கூகுளில் பிரம்மி என்று போட்டால் இந்த இரண்டு தாவரங்களின் புகைப்படமும் வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.