தோசை மாவு இல்லாமல் வித்தியாசமான முறையில் பிரட் தோசை செய்வது எப்படி? 4 பிரெட் இருந்தா இப்படி ஒரு முறை தோசை சுட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்!

bread-dosai-recipe
- Advertisement -

தோசை மாவு இல்லாத சமயங்களில் சட்டுனு இன்ஸ்டன்ட் ஆக வித்தியாசமான தோசை மாவு தயார் செய்வது ஒன்றும் கஷ்டமான விஷயம் அல்ல. நாலு பிரட் துண்டுகள், கொஞ்சம் தேவையான பொருட்கள் இருந்தால் போதும் சட்டுனு இன்ஸ்டன்ட் ஆக சூப்பரான வித்தியாசமான முறையில் தோசை மாவு தயாரித்து அதில் தோசை சுட்டு அசத்தலாம். அந்த வகையில் சுவையான பிரட் தோசை எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பிரட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் – நான்கு துண்டுகள், கோதுமை மாவு – 2 டீஸ்பூன், ரவை – ரெண்டு டீஸ்பூன், தயிர் – ரெண்டு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், கேரட் – 1, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பிரட் தோசை செய்முறை விளக்கம்:
பிரட் தோசை மாவு தயாரிக்க முதலில் பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு சுற்று சுற்றி எடுத்தால் பொடி பொடியாக நன்கு அரை பட்டுவிடும். அரைத்த இந்த பிரட் தூளை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு கலந்து கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு டீஸ்பூன் அதே அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரவை வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் அதனுடன் ரெண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல தக்காளியையும் கழுவி சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய துண்டு கேரட் ஒன்றை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மாவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, துருவிய கேரட் சேர்த்த பின்பு காரத்திற்கு ஏற்ப மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு அளவிற்கு நீங்கள் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இன்ஸ்டன்ட் ஆன பிரட் தோசை மாவு தயார்! இந்த சூப்பரான தோசை மாவில் தோசை சுட்டு பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதற்கு முதலில் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் மிகவும் மெல்லியதாக அல்லாமல் கல் தோசை சுடுவது போல சற்று தடிமனாக தோசையை பரப்பிக் கொள்ளுங்கள். சுற்றிலும் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் விட்டு ரெண்டு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்தால் சூப்பரான தோசை தயார்! இந்த பிரட் தோசை சாப்பிடுவதற்கு வேறு மாதிரியான வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இது போல தோசை மாவு இல்லாத சமயங்களில் பிரட் வைத்து தோசை மாவு தயாரித்து, பிரட் தோசை சுட்டு பாருங்க, உங்களுக்கும் ரொம்பவும் பிடித்து போய்விடும். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த தோசை இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -