பிரியாணி என்றதுமே எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது பாய் வீட்டு பிரியாணி. அது என்னவோ எத்தனை வகை பிரியாணிகள் இருந்தாலும், இந்த பாய் வீட்டு பிரியாணி எனும் போது அதன் ருசியும் மணமும் தனி தான். அந்த பிரியாணியை வேறு எங்கும் நம்மால் சாப்பிட முடியாது, நாம் செய்தாலும் அந்த ருசி இருக்காது. இதற்கு அவர்கள் சேர்க்கும் பொருள்கள் தான் முக்கிய காரணம். அது என்ன என்று நாமும் தெரிந்து கொண்டு இனி நான் வீட்டிலும் பாய் வீட்டு பிரியாணி செய்யலாம்.
இந்த பிரியாணி செய்ய அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மிக மிக குறைவு தான். இப்போது இந்த பதிவில் அந்தப் பொருட்களை வைத்து மசாலாக்களை அரைப்பதோடு அதில் மிளகாய், தனியா எல்லாம் சேர்த்து அரைத்து ஒரே மசாலா தூளாக செய்யப் போகிறோம். அதே போல் சிலருக்கு இந்த பரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னா மிகவும் பிடிக்கும் அதுவும் இது போல தான், நாம் என்ன தான் செய்தாலும் கடைகளில் கிடைக்கும் அந்த சால்னாவின் ருசி அவ்வளவு பெர்ஃபெக்டாக நமக்கு வராது. இந்த மசாலாவை வைத்து அந்த சால்னாவை கூட சூப்பராக செய்து விட முடியும்.
இந்த ஒரு மாசலாவை வைத்து பிரியாணி மட்டும் அல்ல சால்னா, வெஜ் குருமா, என இது செய்தாலும் இந்த மசாலாவை ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதும் உங்கள் சமையலின் ருசி பன்மடங்கு கூடி விடும். வாங்க இப்போ அந்த மசாலா அரைக்கும் விதத்தை பார்த்திடலாம்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து கொஞ்சம் கனமான கடாய் வைத்துக் கொள்ளுங்கள்,கடாய் நன்றாக சூடானவுடன் 7 ஏலக்காய், 10 கிராம்பு, 3 டேபிள் ஸ்பூன் தனியா, 10 மிளகு, 8 காய்ந்த மிளகாய், ஒரு இன்ச் அளவு உள்ள பட்டை பத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் பட்டை சுருள் பட்டையாக இருந்தால் ஒரு இன்ச் அளவு சுருள் பட்டை ஐந்து எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் கடாயில் மிதமான சூட்டில் போட்டு லேசாக வறுக்க வேண்டும். மசாலா சிவந்து வர வேண்டும் என்று அவசியமில்லை, லேசாக வாசம் வரை வறுபட்டாலே போதும். மசாலா வறுப்பட்டவுடன் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். இவ்வளவு தாங்க இந்த மசாலா.
இந்த அளவு ஒரு கிலோ பிரியாணி செய்ய சரியாக இருக்கும். இதை சேர்த்த பிறகு வேறு மசாலா எதுவும் சேர்க்க வேண்டாம். இனி நீங்க பிரியாணி, சால்னா, குருமா இப்படி மசாலா சேர்த்து செய்ய எந்த சமையல்ல வேணாலும் இதை சேர்த்து செய்யலாம் டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.
இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் எல்லா வகையான டிபன்களுக்கும் பொருத்தமான சுவையான பிளைன் குருமா ருசியாக செய்வது எப்படி தெரியுமா? அசத்தலான டிபன் குருமா சுலபமான செய்முறை!
அப்புறம் நீங்க இவ்வளவு சுவையா சமைக்கிறீங்கன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. நீங்களும் இந்த சிம்பிளான மசாலாவை அரைச்சு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.