வித்தியாசமான சுவையில் காலிஃப்ளவர் அல்வா

cauliflower halwa
- Advertisement -

நம்முடைய உணவு பழக்கவழக்கத்தில் இனிப்பு என்பதற்கு ஒரு தனி இடம் இருக்கிறது. எந்த ஒரு விசேஷமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பான முறையில் இனிப்பு என்பது இருக்கும். மேலும் பண்டிகை நாட்களிலும் ஏதாவது ஒரு வகையில் இனிப்பு வகைகளை நாம் செய்வது உண்டு. இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு பிறந்தநாள், திருமணநாள் அல்லது ஏதாவது ஒரு நல்ல செய்தி என்று வரும் பொழுது உடனே ஏதாவது ஒரு பொருளை வைத்து இனிப்பு செய்து அனைவரும் உண்டு மகிழ்வோம். அந்த அளவிற்கு நம்முடைய உணவு பழக்கத்தில் இனிப்பு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

எப்பொழுதும் போல் ஒரே வகையான இனிப்பை செய்வதற்கு பதிலாக புதிய சுவையில் காய்கறிகளை வைத்து பல வகையான இனிப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பூசணிக்காய் அல்வா என்று பல அல்வா வகைகள் இருக்கிறது. இந்த அல்வா வகைகளில் வித்தியாசமான அதே சமயம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு அல்வாவாக தான் காலிஃப்ளவர் அல்வா திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் காலிஃப்ளவர் அல்வா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காலிஃப்ளவர் – ஒரு கப்
  • பால் – ஒரு கப்
  • சர்க்கரை – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் – 3
  • நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை – தேவையான அளவு

செய்முறை

முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து மேலிருக்கும் பூவை மட்டும் தனியாக எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்ந்து அது உருகியதும் அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை போட்டு வறுக்க வேண்டும்.

இவை லேசாக சிவந்தவுடன் திராட்சையை போட்டு வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் நெய்யில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதன் பச்சை வாடை போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாடை போன பிறகு பாலை அதில் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

காலிப்ளவர் பாலில் நன்றாக வேக வேண்டும். பால் நன்றாக வற்றிய நிலைக்கு வரும் பொழுது மத்தை பயன்படுத்தி காலிஃப்ளவரை மசித்து விடவேண்டும். பால் சுத்தமாக இல்லாமல் முழுவதும் சுண்டிய பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்து சர்க்கரை பாகு வரும் நிலையில் பொடி செய்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக அல்வா பதத்திற்கு வரும் சூழ்நிலையில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை போன்றவற்றை அதில் சேர்த்து மீதம் இருக்கும் நெய்யையும் அதில் ஊற்றி ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலந்து இறக்கி விட வேண்டும். மிகவும் அருமையான வித்தியாசமான காலிப்ளவர் அல்வா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: அதிக புரதச்சத்து நிறைந்த கருப்பு கொண்டை கடலை தோசை

எப்போதும் ஒரே மாதிரி அல்வா செய்வதற்கு பதிலாக இந்த முறையில் வித்தியாசமான அல்வாவை செய்து கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

- Advertisement -