உங்க வீட்ல கொண்டைக்கடலை இருந்தா இந்த மசாலாவை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ளும். திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டே இருப்பீங்க.

channa-masala
- Advertisement -

உடலுக்கு அதிகப்படியான சத்து சேர்க்கும் வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து ஒரு மசாலா கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சப்பாத்தி, பூரி, பரோட்டா, வெள்ளை சாதம், இவைகளுக்கு சைட் டிஷ் ஆக இந்த கிரேவியை வைத்துக் கொள்ளலாம். முழுக்க முழுக்க வாசம் நிறைந்த, அசைவ பிரியர்களுக்காகவே இந்த குறிப்பு. மிஸ் பண்ணாதீங்க ஒருவாட்டி உங்க வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

channa-masala1

1 கப் கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊறவைத்து கொள்ள வேண்டும். ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயுடன் முந்திரி – 10, பிரியாணி இலை – சிறிய துண்டு – 1, பட்டை சிறிய துண்டு – 1, கல்பாசி – சிறிதளவு, கிராம்பு – 2, சோம்பு – 1/2 டீஸ்பூன், மல்லித்தழை – 4 இனுக்கு இந்த பொருட்களை எல்லாம் தேங்காயோடு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து, எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே ஓரமாக இருக்கட்டும்.

coconut

அதே மிக்ஸி ஜாரில் பழுத்த தக்காளி பழங்கள் 2, துண்டு துண்டாக நறுக்கி போட்டு ஒன்றும் இரண்டுமாக அரைத்து ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தக்காளிப்பழத்தை மிக்ஸியில் போடாமலேயே கத்தியை கொண்டு மிக பொடியாக வெட்டியும் வைத்துக் கொள்ளலாம். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது கிரேவியை தயார் செய்ய செல்லலாம். ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 எண்ணெயோடு சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த உடன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தனியா தூள் – 3 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அதன் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், மிக்ஸியில் ஒன்றும் இரண்டுமாக அரைத்து வைத்திருக்கும் தக்காளி இவைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

channa-masala2

வெங்காயம் தக்காளி மசாலா பொருட்களின் பச்சை வாடை போனவுடன் கிரேவிக்கு தேவையான உப்பை சேர்த்து 2 குழிக்கரண்டி அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு மசாலாவில் இருக்கும் பச்சை வாடை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும்.

channa-masala3

அடுத்தபடியாக கடாயில் இருக்கும் கிரேவியில் 1/2 ஸ்பூன் கரம் மசாலாவையும், 1/4 ஸ்பூன் மிளகுத் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்ற வேண்டும். தேங்காய் விழுது ஊற்றிய பின்பு வேக வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரோடு கடாயில் சேர்த்து விடவேண்டும். கொண்டைக்கடலையில் அதிகமான தண்ணீரை ஊற்றி வேக வைத்திருந்தால், அந்த தண்ணீரை அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேவி கெட்டிப் பதத்தில் தான் இருக்க வேண்டும்.

channa-masala4

எல்லாப் பொருட்களையும் சேர்த்தவுடன் ஒரு மூடி போட்டு இந்த கிரேவியை மிதமான தீயில் 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்தால் மேலே எண்ணெய் தனியாக பிரிந்து வரும். அந்த சமயத்தில் நன்றாக கலந்து விட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள். சூப்பரான கொண்டைக்கடலை கிரேவி தயார்.

- Advertisement -