அசத்தலான கோதுமை பிஸ்கட் குறைந்த பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே குழந்தைகளுக்கு எப்படி தயாரித்து கொடுக்கலாம்? பிஸ்கட் செய்வது இவ்வளவு சுலபமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

wheat-biscuit0
- Advertisement -

கடைகளில் காசு கொடுத்து வாங்கும் பிஸ்கட்டை விட, வீட்டில் ஆரோக்கியமான முறையில் தரமான பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லதாக இருக்கும். மைதா மாவை விட கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் இந்த பிஸ்கட் சுவையிலும் குறைந்து போய்விடாது! டேஸ்டியான கோதுமை மாவு பிஸ்கட் குறைந்த பொருட்களைக் கொண்டு எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

கோதுமை பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
ஏலக்காய் – மூன்று, சர்க்கரை – முக்கால் கப், கோதுமை மாவு – ரெண்டு கப், உப்பு – ஒரு பின்ச், நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பால் – அரை கப்.

- Advertisement -

கோதுமை பிஸ்கட் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காய்களை போட்டு எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ அவ்வளவு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் இதை சேர்த்து இரண்டு கப் அளவிற்கு கோதுமை மாவை கலந்து கொள்ளுங்கள். ஒரு பின்ச் அளவிற்கு உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடுங்கள்.

எப்போதும் பிஸ்கட் செய்யும் பொழுது இனிப்பு சுவையுடன் ஒரு பின்ச் மட்டும் உப்பு சேர்த்து பாருங்கள், சுவை சற்று தூக்கலாக இருக்கும். கோதுமை மாவுக்கு பதிலாக நீங்கள் மைதா மாவு சேர்த்தும் இந்த பிஸ்கட்டை சூப்பராக செய்து அசத்தலாம். இப்போது ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்க்கு பதிலாக நீங்கள் வெண்ணையும் சேர்க்கலாம். நன்கு உருக்கிய பின்பு அடுப்பை அணைத்து அதை கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நெய் அல்லது வெண்ணெய் எதை நீங்கள் காய்ச்சி ஊற்றினீர்களோ, அது எல்லா மாவிலும் படும்படி நன்கு கைகளை வைத்து பிசைந்து கொள்ள வேண்டும். ஓரளவுக்கு மாவு உதிரி உதிரியாக வரும் பொழுது, நீங்கள் அரை கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்க வேண்டும். பிறகு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கைகளை கொண்டு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளுங்கள். கெட்டியாக கைகளில் ஒட்டாதவாறு திரண்டு வரும் வரை பிசைந்த பின்பு பெரிய பெரிய உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த உருண்டைகளை கைகளைக் கொண்டு அழுத்தி தட்டையாக்கி இரண்டு புறமும் திருப்பி திருப்பி கொஞ்சம் போல் மாவை தோய்த்து பின்னர் சப்பாத்தி தேய்ப்பது போல தேய்க்க வேண்டும். மெல்லியதாக தேய்க்காமல் சற்று தடிமனாக தேய்க்க வேண்டும். பின்னர் ஓரங்களில் இருக்கும் மாவை கத்தியை கொண்டு வெட்டி எடுத்துவிட்டு செவ்வகம் அல்லது சதுர வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வடிவத்தில் பிஸ்கட் வேண்டுமோ, அந்த வடிவத்திற்கு நீங்கள் கத்தியை கொண்டு சிறு சிறு வில்லைகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கோதுமை மாவு துண்டுகள் எல்லாமே ஒரே சரிசமமான அளவுகளில் வெட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பிறகு அடுப்பில் எண்ணெயை நன்கு காய விட்டுக் கொள்ளுங்கள். கொதிக்கும் எண்ணெயில் அனைத்து துண்டுகளையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு கரண்டியை போடாமல் அப்படியே மிதமான தீயில் வைத்து காய விட்டு விடுங்கள். பிறகு அடிப்பகுதி ஒட்டாமல் பிரிந்து வரும். அதன் பிறகு கரண்டியை கொண்டு எண்ணெயில் எல்லா புறமும் பொன்னிறமாக நன்கு சிவக்க வறுத்து எடுத்தால் சூப்பரான, சுவையான கோதுமை பிஸ்கட் ரெடி! இந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -