2 முட்டை இருந்தா போதும் சூப்பரான முட்டை பணியாரம் 10 நிமிடத்தில் தயாரித்து விடலாமே!

egg-muttai-paniyaram
- Advertisement -

பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முட்டை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, துருவிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, துருவிய கேரட் – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – அரை கைப்பிடி, முட்டை – ரெண்டு, உப்பு – தேவையான அளவு, இட்லி மாவு – ஒரு கப்.

- Advertisement -

முட்டை பணியாரம் செய்முறை விளக்கம்:
முட்டை பணியாரம் செய்வதற்கு முதலில் தாளிப்பு ஒன்றை தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள் நன்கு சிவக்க வறுபட்டதும் கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி அரை ஸ்பூன் அல்லது நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து தாளித்து ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் ஓரளவுக்கு நன்கு வதங்கி வரும் பொழுது கேரட் இருந்தால் அதை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் சுவையாக இருக்கும். கேரட் இல்லை என்றாலும் பரவாயில்லை விட்டு விடலாம். இதனுடன் அரை கைப் பிடி அளவிற்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்க்க வேண்டும். ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விட்ட பிறகு அடுப்பை அணைத்து குளிர ஆற வைத்து விடுங்கள். பின்னர் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பீட்டர் கொண்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு முட்டைக்கு ஒரு கப் அளவிற்கு இட்லி மாவு சேர்க்க வேண்டும். புளித்த இட்லி மாவு புளிக்காத இட்லி மாவு எது எடுத்தாலும் பரவாயில்லை. இட்லி மாவு முட்டையுடன் நன்கு கலந்து விட வேண்டும். பிறகு தாளித்தவற்றை இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான் இப்போது அடுப்பில் பணியார சட்டி ஒன்றை வைத்து நன்கு காய விடுங்கள். சட்டி காய்ந்ததும் குழிகளில் எண்ணெய் விட்டு முட்டை பணியாரம் மாவை ஒவ்வொரு குழிகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள். முக்கால் பதம் வெந்த பிறகு திருப்பி போட வேண்டும். அப்பொழுது தான் குண்டு குண்டாக முட்டை பணியாரம் வெந்து வரும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -