செல்வ செழிப்புடன் ஒருவர் வாழ வேண்டும் என்றால் அவருக்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதே போல் பெருமாளுக்கு உரிய புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுதும் பெருமாளின் அருளால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இந்த முறை ஏகாதசியும் சனிக்கிழமையும் ஒன்று சேர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட அற்புதமான நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாடு நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பண வரவை விட அதிக அளவு பண வரவை பெற முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஏகாதசி ஏலக்காய் பரிகாரம்
காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் பெருமாள் என்றும் நாம் வாழுகின்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான காரியங்களையும் நடத்தித் தரக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாகவும் பெருமாள் திகழ்கிறார். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய தினங்களில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் சரி, விரதம் இருக்காமல் வழிபாடு செய்தாலும் சரி முழுமனதோடு செய்யும் பொழுது அதற்குரிய முழுமையான பலனை பெற முடியும். அதிலும் பெருமாளுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபாடு செய்யும்பொழுது கூடுதல் பலனை நம்மால் பெற முடியும்.
அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் நாள் சனிக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய ஏகாதசி திதி. இந்த நாளில் பெருமாளுக்கு உரிய ஏலக்காயை வைத்து இந்த முறையில் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது பணவரவு என்பது அதிகரிக்கும். பொதுவாகவே ஏலக்காய் என்பது நறுமணம் மிகுந்த பொருள். நறுமணம் மிகுந்த பொருட்களில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் வாசம் புரிகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பெருமாள் ஆலயத்தில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்தில் கூட ஏலக்காயை சேர்த்திருப்பார்கள். மேலும் ஏலக்காய் என்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடியது பண வசியத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. ஏலக்காயில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதனால் பெருமாளுக்கு உரிய தினத்தில் ஏலக்காயை பயன்படுத்தி நாம் எந்த ஒரு பரிகாரத்தையும் வழிபாட்டையும் செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளை நம்மால் பெற முடியும்.
அந்த வகையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒரே ஒரு ஏலக்காயை பயன்படுத்தி இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை காலை 4 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலம், எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த வழிபாட்டை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அதேபோல் அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு துளசி மாலை சாற்றி பெருமாளுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்து ஏதேனும் நெய்வேத்தியத்தை அவருக்கு முன்பாக வைத்துவிட்டு செய்யும் பொழுது அதற்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
ஒருவேளை பூஜையறையில் அமர்ந்து இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்பவர்கள் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்குமோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு ஏலக்காய் தான் வேண்டும். இந்த ஏலக்காய் வாசனை மிகுந்த ஏலக்காயாகவும் விதைகள் எதுவும் தெரியாத ஏலக்காயாகவும் இருக்க வேண்டும். இந்த ஏலக்காயை முதலில் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து வலது கையில் வைத்து மூடிக்கொள்ளுங்கள்.
பிறகு கண்களை மூடி மனதிற்குள் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்து அனைத்து விதமான செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய ஏலக்காயை எடுத்து எந்த இடத்தில் பணம் வைத்து புலங்குகிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். ஏலக்காயின் வாசனை தீரும் வரை பணம் வைக்கும் இடத்திலேயே இருக்கட்டும். ஏலக்காய் வாசனை தீர்ந்த பிறகு அதை எடுத்து நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தலாம், துளசி செடி இருக்கும் பட்சத்தில் அதிலும் போட்டு விடலாம்.இந்த மந்திர வழிபாட்டை துளசி செடிக்கு அருகில் அமர்ந்து செய்யும்பொழுது இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
” ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ “
இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை கூட சேர்ந்து வரும் ஏகாதசி வழிபாடு
பெருமாளின் அருளை பெறுவதற்கு உகந்த கிழமையான சனிக்கிழமையும் பெருமாளுக்கு உரிய திதியான ஏகாதசி திதியும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நமக்கு பணவரவை அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.