எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது அந்த காரியம் எந்தவித தடைகளும் இன்றி நடைபெறும் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மை. அப்படிப்பட்ட விநாயகரை எண்ணிய எண்ணம் நிறைவேறுவதற்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
யாருக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாத ஒரு நல்ல காரியத்தை நாம் செய்ய முயற்சித்தும் அந்த காரியத்தில் ஏதாவது தடைகள் ஏற்பட்டு விட்டது என்னும் பட்சத்திலோ அல்லது எந்த வித தடைகளும் ஏற்படாமல் அந்த காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ விநாயகப் பெருமானுக்கு ஏழு நாட்கள் இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும்.
இந்த வழிபாட்டை எந்த நாளில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். குறிப்பாக திங்கட்கிழமை ஆரம்பிப்பது விசேஷமான ஒன்று. அன்றைய தினம் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டையும், பூஜை அறைஒயையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். விநாயகப் பெருமானின் படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். பிறகு சுத்தமான மஞ்சள் எடுத்து அதில் பன்னீர் ஊற்றி குழைத்து மஞ்சள் பிள்ளையார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியுடன் வெட்டிவேரை கலந்து திரியாக பயன்படுத்த வேண்டும்.
பிறகு விநாயகப் பெருமானுக்கு எருக்கம் பூவை பயன்படுத்தி மாலை கோர்த்து அணிவிக்க வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பூ இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஐந்து பூக்களையாவது வைத்து மாலை கட்டி போட வேண்டும். அடுத்ததாக அவருடைய பாதத்தில் ஒரு அருகம்புல்லை வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம்
வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி
யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி
நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி
மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி
சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி
அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல
சங்கு சக்கரம் சர்வ சத்ரு வசீகரம்
உலகெல்லாம் உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா
ஒருமுறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு உங்களுடைய வேண்டுதலை கூறி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது நாம் எந்த காரியத்தை நினைத்து செய்தோமோ அந்த காரியம் எந்தவித தடையும் இல்லாமல் விரைவிலேயே நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: நவகிரக பாதிப்பு நீங்க காளியம்மன் வழிபாடு
முழு முதற் கடவுளான விநாயக பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நாம் எண்ணிய எண்ணம் எளிதில் நிறைவேறும்.