வீட்டில் வளர்க்கும் செடிகளின் இளம் இலைகள் சுருங்குவது, தடித்து உடையக்கூடியதாக மாறுவது, நுனி மொட்டுகள் இறப்பது, பூக்கள் குறைவாகப் பூப்பது அல்லது உதிர்வது, காய்கள் பிடிப்பதில் குறைபாடு அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் இருப்பது போன்ற அறிகுறிகளை நீங்கள் கவனித்து இருந்தால் இந்த இலையை உரமாக இப்படி கொடுத்து பாருங்கள், நன்கு செழிப்பாக வளரும். வாங்க இந்த தோட்டக்குறிப்பு பதிவில் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் எல்லாம் செடிகளுக்கு போரான் சத்து குறைபாடு இருப்பதை கண்டறியும் வழிகளாகும். தாவரங்கள் பொதுவாக மண்ணில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன. போரான் என்பது தாவர வளர்ச்சிக்கு அவசியமான ஒரு நுண்ணூட்டச்சத்து. இது தாவரங்களின் பல முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. போரான் செல் சுவர்களின் உருவாக்கத்திற்கும், அதன் உறுதிக்கும் அவசியமானது. இது தாவரங்களுக்கு நல்ல வலிமையை அளிக்கிறது.
தாவரங்களில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைகளை இலைகளிலிருந்து வேர்கள், பழங்கள் மற்றும் பூக்கள் போன்ற வளர்ச்சி அடையும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல போரான் உதவுகிறது. போரான் மகரந்தக் குழாயின் வளர்ச்சிக்கும், மகரந்தச் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் மிக முக்கியம். இது விதை மற்றும் பழங்கள் உருவாவதற்கும் அவசியம். தாவர ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பதில் போரான் ஒரு பங்கு வகிக்கிறது. தாவரங்கள் மண்ணிலிருந்து நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு போரான் உதவுகிறது.
போரான் குறைபாடு ஏற்பட்டால், இளம் இலைகள் சுருங்குவது, நுனி மொட்டுகள் இறப்பது, பூக்கள் உதிர்வது, பழங்கள் உருவாவதில் சிக்கல் மற்றும் வேர் வளர்ச்சி குறைபாடு போன்ற அறிகுறிகள் தென்படலாம். வெவ்வேறு தாவரங்களுக்கு போரான் தேவைப்படும் அளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக, சில காய்கறிப் பயிர்களுக்கு (உருளைக்கிழங்கு, பீட்ரூட், சூரியகாந்தி) மற்ற பயிர்களை விட அதிக போரான் தேவைப்படலாம்.
எருக்கன் செடி இலைகளில் போரான் சத்து குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன. பெரிய அளவில் இதை பயன்படுத்தாவிட்டாலும், வீட்டில் வளரும் சிறிய செடிகளுக்கு பயன்படுத்தலாம். உங்களுக்கு கிடைக்கப்பெற்ற எருக்கன் செடியின் இலைகளை வெட்டி எடுத்து அதை ஒரு பாக்கெட் தண்ணீரில் போட்டு மூடி வையுங்கள். இந்த வேலையை செய்யும் பொழுது இலையில் இருந்து எருக்கன் பால் கண்ணில் படாதவாறு பாதுகாப்புடன் இருப்பது நல்லது. அதை அப்படியே 40 நாட்களுக்கு விட்டு விடுங்கள். பிறகு இந்த தண்ணீரை ஒவ்வொரு செடிகளுக்கும் அரை லிட்டர் வீதம் எல்லா செடிகளுக்கும் நீங்கள் தெளித்து வரலாம். மண்ணை சமமாக பரப்பி மண்ணிலும் அல்லது அதிகம் தேவைப்படும் செடிகளுக்கு இலை வழியாகவும் நீங்கள் தெளித்து விடலாம்.
இதையும் படிக்கலாமே:
வேண்டிய வரம் கிடைக்க ஆடி வெள்ளி வழிபாடு
கடையிலிருந்து வாங்குவதாக இருந்தால் போராக்ஸ் அல்லது போரிக் அமிலத்தை வாங்கி மிகக் குறைந்த அளவில் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பது நல்லது, ஏனெனில் வெயில் நேரத்தில் தெளித்தால் இலைகள் கருகக்கூடும். சில உரங்கள் போரான் சத்துடன் கலந்தே கிடைக்கின்றன. இவை மண்ணுக்குத் தேவையான மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் போரானையும் வழங்குகின்றன. போரான் மிகக் குறைந்த அளவிலேயே தாவரங்களுக்குத் தேவைப்படும் ஒரு நுண்ணூட்டச்சத்து. எனவே, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான போரான் தாவரங்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.