ஒருவரை குறை கூறும் முன் இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், இனி உங்கள் வாயால் ஒருவரையும் நீங்கள் குறையே கூற மாட்டீர்கள்!

scold-silence
- Advertisement -

ஒருவரை ஊக்குவிப்பது என்பது அவருடைய வாழ்க்கையை நீங்கள் மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை பெறுகிறீர்கள் என்று அர்த்தம். அதுவே நீங்கள் ஒருவரை குறை கூறுகிறீர்கள் என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் விளையாடப் போகிறீர்கள் என்று அர்த்தம். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடக்கூடிய உரிமையை நமக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை! நம்மிடம் இருக்கும் குறைகள் ஏராளம் என்று இருக்கும் பொழுது, அடுத்தவர்களை எப்படி நம்மால் குறை கூற முடிகிறது?

ஒருவரிடம் இருக்கும் குறைகளை விட, அவர்களுடைய நிறைகளை பார்த்து அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். குறை காணும் உலகில் எதையும் காண இயலாது. அதிலும் வேற்று மனிதர்கள் அல்லாமல் நம்முடன் இருக்கும் நம்முடைய சொந்த இரத்தபந்த உறவுகளே இப்படி நம்மை குறை கூறும் பொழுது இருக்கின்ற தன்னம்பிக்கையையும் இழந்து, சோர்ந்து போய் விடுகிறோம். நம்மை யாராவது குறை கூறினாலோ அல்லது நாம் யாரையாவது குறை கூற போகின்றோம் என்றாலும் இந்த ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டால் இனி அந்த தவறை நாம் செய்யவே மாட்டோம். குறை கூறுபவர்களை பார்த்து சோர்ந்து போகவும் மாட்டோம். அத்தகைய கதை என்ன? இனி பார்ப்போம்.

- Advertisement -

பேருந்து ஒன்றில் தாய், தந்தையருடன் பயணம் செய்த ஒரு சிறுவன் மிகவும் மகிழ்ச்சியோடு பிரயாணம் மேற்கொண்டு இருந்தான். ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்த அச்சிறுவன் வேகமாக செல்லும் பேருந்தில் இருந்து வெளியில் நடக்கும் வேடிக்கைகளை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். திடீரென கைகளைத் தட்டி, ‘மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் செல்கின்றன, அப்பா’ என்று ஆரவாரம் செய்ய தொடங்கினான்.

இதைப் பார்த்த மற்ற பயணிகள் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று நினைக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில், ‘மேகம் எல்லாம் நம்முடன் சேர்ந்து வருகின்றன’ என்று மீண்டும் கையை தட்டி மகிழ்ச்சிப் பெருக்கில் ஆர்ப்பரித்தான். இதைக் கேட்டவுடன் அவர்கள் நினைத்ததை உறுதி செய்து கொண்டனர். இதனால் அவனுடைய பெற்றோர்களிடத்தில் சக பயணிகள் உங்களுடைய மகனை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டியது தானே என்று கேட்டனர்.

- Advertisement -

ஆம்! நாங்கள் இப்போது மருத்துவரிடம் தான் சென்று வருகிறோம். ஆனால் மனநல மருத்துவர் அல்ல, கண் மருத்துவர்! அவனுக்கு கண் பார்வை இன்று தான் கிடைத்தது என்று கூறினர். இதுவரை தாங்கள் பார்த்தது, கேட்டது, நினைத்தது எல்லாமே தவறு என்று புரிந்து கொண்ட மற்ற பயணிகளுக்கு இனி யாரையும் என்னவென்று தெரியாமல் குறை கூறக் கூடாது என்று நொந்து கொண்டனர். நாம் பார்ப்பதை வைத்தும், கேட்பதை வைத்தும் ஒருவரை குறை கூறினால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நாம் பாவம் செய்தவராக மாறுகிறோம். எனவே ஒருவரை குறை கூறுவதற்கு முன்பு நமக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

உண்மையிலேயே ஒருவர் குறை கூறும் அளவிற்கு நடந்து கொண்டால் அவர்களை அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டுமே தவிர, மேலும் மேலும் குற்றவாளியாக்க நாமே இடம் கொடுத்து விடக் கூடாது. கண்களால் பார்ப்பதை வைத்து எதையுமே எடை போட கூடாது. எவரையும் இப்படித்தான் என்று தீர்மானிக்க கூடாது. சில நேரங்களில் அந்த உண்மை நமக்கு வாயடைத்துப் போகச் செய்து விடலாம். எனவே ஒருவரை குறை கூறும் முன் இந்த கதையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள், நீங்களே வாயை மூடிக் கொள்வீர்கள்.

- Advertisement -