சூப்பரான ‘பெப்பர் ஃப்ரைட் ரைஸ்’ ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. விடவே மாட்டீங்க. திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டே இருப்பீங்க.

garlic-rice
- Advertisement -

உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரக்கூடிய ‘பூண்டு மிளகு சாதம்’ எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் இந்த சாதத்தை அடிக்கடி செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இந்த சாதத்தை செய்து தரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் சளித் தொந்தரவும் இருக்காது. சரி சட்டென்று அந்த ஆரோக்கியமான ரெசிபியை சுலபமாக எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.

முதலில் வடித்த உதிரி உதிரியாக வேக வைத்த சாதத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதம் நன்றாக ஆறி இருக்க வேண்டும். அடுத்தபடியாக 15 லிருந்து 20 பல் பூண்டை தோலுரித்து மிக மிக பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது இந்த வெரைட்டி ரைஸை தாளிக்கலாம். அடி கனமான அகலமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 3, முந்திரி பருப்பு – 10, சேர்த்து இந்த பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக சிவந்தவுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து, பூண்டினை பச்சை வாடை நீங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பூண்டு

பூண்டு வதங்கும் போது நமக்கு ஒரு நல்ல மணம் வீசும். பூண்டின் நிறம் லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு, அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்கி வெங்காயத்தில் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து, வெங்காயத்தின் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விட்டு, அடுத்தபடியாக தயாராக எடுத்து வைத்திருக்கும் சாதத்தை உதிரியாக கடாயில் சேர்த்து, இந்த சாதத்திற்கு மேலே 1 1/2 ஸ்பூன் இலிருந்து 2 ஸ்பூன் வரை மிளகுத்தூளை தூவி, தேவைப்பட்டால் உப்பு தூளைத் தூவி, நன்றாக சாதத்தை கடாயில் இருக்கும் மசாலா பொருட்களோடு கலந்து விட வேண்டும். (சாதத்தில் உப்பு போட்டு வடித்து இருந்தால் உப்பை செக் பண்ணி பாத்துட்டு சரியான அளவு போட்டுக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

ஐந்து நிமிடங்கள் சாதத்தை கடாயில் சூடு செய்து, அடுப்பை அணைத்துவிட்டு மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே ஒரு மூடி போட்டு வைத்து விட்டு, 5 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டு பாருங்கள். இதில் பூண்டு வாசமும் மிளகு வாசமும் சேர்ந்து, இந்த சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ருசித்துப் பார்த்தால்தான் புரியும். மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இந்த சாதத்தை லஞ்ச் பாக்ஸில் கொடுக்கலாம். சூப்பரான ஹெல்தியான வெரைட்டி ரைஸ் இது.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் இதற்கு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லெட் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு வறுவல், செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் இரண்டு இருந்தால் கூட இந்த சாதம் உள்ளே இறங்குவதே தெரியாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல நிச்சயமா ட்ரை பண்ணி பாருங்க. விடவே மாட்டீங்க. திரும்பத் திரும்ப செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

- Advertisement -