இந்த மசாலா அரைத்து ஊற்றி, பச்சை பட்டாணி குருமா செய்து பாருங்கள். இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

green-peas-gravy
- Advertisement -

உங்க வீட்ல நீங்க மட்டன் வாங்கி இருக்க மாட்டீங்க. பச்சை பட்டாணியை வைத்து தான் குருமா செய்வீங்க. ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த குருமாவில் வீசும். அப்படி ஒரு சூப்பர் பச்சை பட்டாணி குருமா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களுடன் பச்சை பட்டாணியை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும் குருமா ரெசிபி உங்களுக்காக.

pachai pattani

முதலில் இந்த பச்சை பட்டாணி கிரேவி செய்வதற்கு 250 கிராம் பச்சைப் பட்டாணியை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்‌. இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இந்த குருமாவுக்கு தேவையான மசாலா எப்படி அரைப்பது என்று பார்த்துவிடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து விடுங்கள். அதில் சீரகம் – 1/4 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், பட்டை – 2 சிறிய துண்டு, கிராம்பு – 2, அன்னாசிப்பூ – 1/2, கசகசா – 1/4 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இஞ்சி ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல், இந்த பொருட்களை எல்லாம் அந்த கடாயில் போட்டு, எண்ணெய் ஊற்றாமல் வறுத்து விடுங்கள். இரண்டு நிமிடம் போல வறுத்தால் போதும். அதன் பின்பு இதோடு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல் சேர்த்து, வெங்காயம் சுருங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு கைப்பிடி தேங்காய் துருவலை போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த சூட்டிலேயே இந்த தேங்காயை வதக்கி விடுங்கள்.

masala1

இப்போது மசாலா பொருட்கள் வறுபட்டு தயாராக உள்ளது. இது நன்றாக ஆறட்டும். வருத்த இந்த மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலா விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குழம்பை குக்கரில் தாளிக்க போகின்றோம். அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், சோம்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். சோம்பு எண்ணெயில் பொரிந்து வந்தவுடன் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் – 10 பல், சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சேர்த்து தக்காளி பழங்களை பச்சை வாடை போக வதக்கி விட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தயாராக எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை குக்கரில் போட வேண்டும்.

இதோடு குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை குக்கரில் சேர்த்து குழம்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து விட்டு குக்கரை மூடி 2 விசில் வைத்தால் போதும். கமகம வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசுதா இல்லையான்னு பாருங்க. (குழம்பு மிளகாய் தூள் உங்கள் வீட்டில் இல்லை என்றால் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.)

green-peas-gravy1

பிரஷர் அடங்கி குக்கரை திறந்ததும் இறுதியாக இந்த கிரேவியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கொத்தமல்லி தழைகளைத் தூவி, அதன் பின்பு பரிமாற வேண்டியது தான் வேலை. சுடசுட இந்த குழம்பை இட்லி தோசை சப்பாத்தி சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

பின்குறிப்பு: உங்களுக்கு பிரஷ்ஷாக பச்சை பட்டாணி கிடைக்கவில்லை என்றால், காய்ந்த பச்சை பட்டாணியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அந்த பட்டாணியையிலும் இந்த ரெசிபியை செய்யலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -