குரு பெயர்ச்சி பலன்கள் 2018 மேஷம்

guru-peyarchi

மேஷம்:

Mesham Rasi

எதையும் துணிவோடு எதிர்த்து நிற்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு 04-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகயிருப்பதால் உங்களின் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகளை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் நீண்ட தடை தாமதத்திற்கு பின்பே உங்களுக்கு கிடைக்கும். வயிறு சம்பந்தமான நோய்கள், அஜீரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணைக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சனிபகவான் 9 ஆம் வீட்டில் இருப்பதால் வெளியூர் பயணங்களில் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.

13-2-2019 அன்று ஏற்படவிருக்கும் ராகு மாற்று கேது பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். ஈடுபடும் எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். பரிச்சயமில்லாதவர்களிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் மிக பெரிய தொகையை ஈடுபடுத்தக்கூடாது. அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறமுடியாவிட்டாலும் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு. கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள். குருபகவான் 8 ஆம் இடத்தில் இருந்தாலும் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் பகவானுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

உங்கள் உடலை ஓய்வின்றி தொடர்ந்து வருத்திக்கொள்வதாலும், அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் அசதி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படலாம். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பல தாமதங்களுக்கு பிறகு வெற்றியடையும். உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாவார்கள். நீங்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதில் பிரச்சனைகள் உருவாகலாம். புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரங்களில் சக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் மறைமுக எதிர்ப்புகள் போட்டி பொறாமைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள், வேலையாட்கள் மூலமும் உங்களுக்கு சில பிரச்சனைகள் உருவாகக்கூடும்.

பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல விதமான அலைச்சல்கள் மற்றும் சங்கடங்களை சந்தித்த பிறகே நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியில் மற்றும் பொது வாழ்வில் இருபவர்களுக்கு வீண் வதந்திகள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அரசாங்கம் வழங்கும் பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும், கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் சற்று மன சங்கடங்கள் ஏற்படும். மாணவ -மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். தவறான நட்புகளால் அவப்பெயரை சம்பாதிக்கும் நிலையுண்டாகும்.

- Advertisement -
Guru peyarchi palangal Mesham
Guru peyarchi palangal Mesham

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உங்கள் ராசியாதிபதியாகிய செவ்வாய்க்கு குரு பகவான் நட்பு கிரகம் ஆவார். இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பண விடயங்களில் நெருக்கடிகள் இருந்தாலும், திடீர் பொருள் வரவுகளும் இருக்கும். தம்பதிகளிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். அசையும் சொத்து, அசைய சொத்துகள் விற்பனையில் சிறிது தடங்கல் ஏற்பட்டது நீங்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

சனி பகவான் 9 ல் சஞ்சாரம் செய்வதால் மிகப்பெரும் அளவில் பணத்தை ஈடுபடுத்தி செய்யும் தொழில்கள் இன்ன பிற விடயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாறுதல்களால் அலைச்சல் அதிகரிக்கும்.திருமண முயற்சிகளில் இருப்பவர்கள் அந்த முயற்சியை சற்று தள்ளி வைப்பது நல்லது. இக்காலத்தில் உங்கள் தொழில்,வியாபாரங்களில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

எல்லாவித எதிர்ப்புகளையும், போட்டிகளையும் எதிர்த்து சமாளித்து வெற்றி பெறக்கூடிய சக்தி உண்டாகும். அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். ஊழியர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் படித்தால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.

Guru peyarchi palangal Mesham
Guru peyarchi palangal Mesham

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

இக்காலத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் மீண்டும் கட்டிவிடும் சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று தொய்வு ஏற்படும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை – அதற்கான பலன்

குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்படையும். பிறருடனான பேச்சுவார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளும் இக்காலத்தில் நண்பர்களாக மாறுவார்கள். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

சிறு சிறு மருத்துவச்செலவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டாலே வீண் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க முடியும். உற்றார் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்

வியாழக்கிழமை தோரும் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும். சனி பகவானுக்கும் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.