குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 துலாம்

guru-peyarchi thulam

நடுநிலைமை தவறாதவர்களே!

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களே! குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால், கூடுமானவரை சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

thulam

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிலும் தெளிவு பிறக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

- Advertisement -

குருபகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் – மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும், அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புது வேலை அமையும். ஆனாலும், வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்,நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிற மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குருபகவான் தன் சுயநட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள். கடன் பிரச்னைகள் கவலை தரும். ஆனாலும், வசதி வாய்ப்புகள் கூடும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரங்களில் செலவிடுவீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படும். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கன்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

guru

மாணவ மாணவிகளே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டாம். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! வரும் என்று நினைத்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். இளைய கலைஞர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிடவேண்டி வரும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காரியம் சாதிக்க வைக்கும்.

குரு பெயர்ச்சி பரிகாரம்: வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.