நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் குரு என்ற ஒரு ஸ்தானம் இருக்கும். அந்த ஸ்தானத்தில் யாரை நாம் குருவாக நினைக்கிறோமோ அவர்களை நினைத்து செய்யக்கூடிய ஒரு பூஜையை தான் குருபூஜை என்று கூறுகிறோம். இந்த குரு பூஜையை செய்வதன் மூலம் குருவின் அது பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் விலகுவதற்குரிய வாய்ப்புகளும் நம்மை வந்து சேரும். அப்படிப்பட்ட குரு பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குருபூஜை செய்யும் முறை
வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு இருக்கும் நேரத்தில் யாராவது ஒருவரின் துணையுடன் அந்த பிரச்சினையில் இருந்து நாம் வெளி வருகிறோம் என்றால் அவரை குருவாக எடுத்துக் கொள்ளலாம். குரு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய தெய்வங்கள் பல இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர், சாய்பாபா, மஹா பெரியவர், கிருஷ்ணர், சித்தர்கள் போன்றோர்களை குருவாக நினைத்து நாம் வழிபாடு செய்யலாம். சிவபெருமானை கூட குரு ரூபத்தில் நாம் வழிபாடு செய்ய முடியும்.
இப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவரை மானசீகமாக நாம் குருவாக நினைத்துக் கொண்டு வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்ய அவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தரக்கூடியவர்களாக அவர்கள் விளங்குவார்கள். இந்த பூஜையை குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும்.
புதன்கிழமை அன்றே வீட்டை சுத்தம் செய்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் நீங்கள் யாரை குருவாக நினைத்து இருக்கிறீர்களோ அவர்களின் படத்தை வைக்க வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர், மலர்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பஞ்சபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து குருவின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
அடுத்ததாக கிண்ணத்தில் இருக்கக்கூடிய தண்ணீரில் மலரை நனைத்து அதை குருவின் படத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து முடித்த பிறகு சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைத்து வாசனை மிகுந்த மலர்களால் குருவின் பெயரைச் சொல்லி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். முதல் நாள் இரவே கருப்பு கொண்டை கடலையை ஊற போட்டு அதை மாலையாக கோர்த்து குருவிற்கு சாற்ற வேண்டும்.
அடுத்ததாக குருவிற்கு ஏதாவது ஒரு பொருளை பிரசாதமாக படைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்துவிட்டு ஒரு தட்டின் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து அதில் கற்பூரத்தை ஏற்றி ஆராத்தி காட்டுவது போல் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு படத்தை ஒரு சேரில் வைத்து அவரை மானசீகமாக வலம் வருவது போல் நினைத்து வலம் வர வேண்டும்.
மறுநாள் கொண்டை கடலை மாலையை எடுத்து பசு மாட்டிற்கு கொடுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு நாம் குருபூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் இரண்டு சுமங்கலி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு அன்னதானம் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:வீண்விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க
மிகவும் எளிமையான முறையில் இப்படி குருவிற்கு பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு நமக்கு வழிகாட்டியாக அவர்கள் நம்முடன் வருவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.