தலை முடி பிரச்சனை என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது. ஒருவருக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மற்றொருவருக்கோ புதிய முடிகள் வளராமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ முடி வளராமல் அப்படியே சிறிய அளவிலேயே இருக்கும். இன்னும் சிலருக்கோ இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை உண்டாகும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை தரக்கூடிய ஒரு எண்ணையாக தான் இந்த தேங்காய் பால் மூலிகை எண்ணெய் திகழ்கிறது. அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
கடைகளில் கெமிக்கல் நிறைந்த எண்ணையை வாங்கி தலைக்கு தேய்ப்பதன் மூலம் பல விதமான பிரச்சனைகள் உண்டாகும். அதை தவிர்த்து விட்டு நாமே நம் கை பட ஆரோக்கியமான பொருட்களை ஒன்றாக சேர்த்து தேங்காய் எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடிக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும். அந்த வகையில் இந்த பதிவில் தேங்காய் பாலை வைத்து தயார் செய்யக்கூடிய ஒரு மூலிகை எண்ணையை தான் பார்க்கப் போகிறோம்.
முதலில் இந்த தேங்காய் பால் மூலிகை எண்ணெயை தயார் செய்வதற்கு கஷாயம் ஒன்றை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் மருதாணி பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்க்க வேண்டும். கடைசியாக இதில் இரண்டு ஸ்பூன் வல்லாரை பொடியையும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து இதை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கசாயம் 750 மில்லி லிட்டராகும் வரை அடுப்பிலேயே வைத்திருந்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதை அப்படியே அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆரிய பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி அந்த பொடியையும், கஷாயத்தையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பொடியில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் அந்த கசாயத்தில் இறங்கி இருக்கும் என்பதால் அந்த பொடி தேவையில்லை.
இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்புக்கடாயை வைத்து அதில் 200 எம்எல் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். அடுத்ததாக அதில் 250 எம்எல் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். இவை இரண்டையும் ஆறு நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். ஆறு நிமிடம் கழித்து நாம் எடுத்து வைத்திருந்த கஷாயத்தை அதில் ஊற்றி குறைந்த தீயிலேயே வைத்து 40 நிமிடம் வரை நன்றாக கலந்து விட வேண்டும். 40 நிமிடத்திற்கு பிறகு அந்த எண்ணையில் 15எம்எல் விளக்கெண்ணெயை ஊற்ற வேண்டும்.
5 நிமிடம் கழித்து அடியில் இருக்கக்கூடிய பொடியை எடுத்து கையில் உருட்டி பார்க்க வேண்டும். அப்பொழுது அது நன்றாக திரண்டு வரவேண்டும். அதுதான் பதம். ஒருவேளை திரண்டு வராமல் பசை போல் இருந்தது என்றால் அதில் தண்ணீர் சத்து இருக்கிறது என்று அர்த்தம். அது முற்றிலும் தீரும் வரை அடுப்பிலேயே வைத்திருங்கள். பதம் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். தலைமுடிக்கு உகந்த மூலிகைகளை பயன்படுத்தி தேங்காய் பால் மூலிகை எண்ணெய் தயாராகி விட்டது. இதை தொடர்ச்சியாக உபயோகப்படுத்துபவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும். முடி அடர்த்தியாகவும் அதே சமயம் கருமையாகவும் பட்டுப்போல மிருதுவாகவும் நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: மரு உதிர இயற்கையான டிப்ஸ்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நாமே நம்முடைய தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயை தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.