நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி சட்னியை ரொம்பவே சுவையாக வீட்டிலேயே எப்படி அரைப்பது? இத தெரிஞ்சுக்காம இருந்து விடாதீர்கள்!

inji-thuvaiyal
- Advertisement -

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இஞ்சி பல வகைகளில் நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்தை பாதுகாக்க உதவும். வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்க்க வேண்டும். ஆனால் இஞ்சியை பெரும்பாலும் தவிர்ப்பதால் இஞ்சி சட்னி, இஞ்சி துவையல் என்று அரைத்துக் கொடுத்தால் ரொம்பவே நல்லது. சுவையான இஞ்சி சட்னி எப்படி எளிதாக அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 4, நறுக்கிய இஞ்சி துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 4, உப்பு – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

இஞ்சி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கொத்து இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை எப்பொழுதும் தோலுடன் பயன்படுத்தக் கூடாது. இஞ்சியின் தோலில் ஒருவிதமான விஷத்தன்மை இருக்கும். ஆனால் பூண்டு சேர்க்கும் பொழுது தோலுடன் சேர்த்துக் கொள்வார்கள் அதில் பிரச்சினை இல்லை. தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளுடன், 4 பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்கு சிவக்க வறுத்த உடன் வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து லேசாக உப்பி வர வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை தனியே எடுத்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே எண்ணெயில் வெட்டி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக சுருள நன்கு வதக்கிய பின்பு, அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்துள்ள பொருட்களுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரவென்று ஒரு சுற்று சுற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். சட்னிக்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கெட்டியாக அரைத்த பின்பு இதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து அரைக்க வேண்டும். இஞ்சி சட்னிக்கு வெல்லம் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். எனவே இதனை தவிர்த்து விடாதீர்கள்! வெல்லம் சேர்க்கும் பொழுது தான் இஞ்சி சட்னி சுவையாக இருக்கும். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிக்க ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொட்ட வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்துள்ள இஞ்சி சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -