ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா செய்வது எப்படி?

masala

நாம் எல்லோருக்குமே பூரி என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக நம் வீட்டு குழந்தைகளுக்கு! ஆனால் அந்த பூரிக்கு, மசாலாவை, பக்குவமாக செய்வது சில பேருக்கு வராது. பூரி மசாலாவை ஹோட்டல் ஸ்டைலில் சுவையாக எப்படி செய்வது? அதேசமயம் வீட்டு ஸ்டைலில் பூரி மசாலா எப்படி சுவையாக செய்வது? என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு முறைகளில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!

Masala

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4, பொட்டுக்கடலை – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சைமிளகாய் – 4 (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்), கறிவேப்பிலை –  2 கொத்து, இஞ்சி – சிறிய துண்டு நசுக்கியது, பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது.

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி கொஞ்சம், உப்பு போட்டு நன்றாக வேக வைத்து எடுத்து, தோலுரித்து மசித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மிக்ஸியில் 4 டேபிள் ஸ்பூன் அளவு, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும், மசாலாவில் சேர்க்கப் போவதில்லை. அதிலிருந்து எவ்வளவு தேவையோ அதை மட்டும்தான் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம். சரி மசாலா எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம்.

Urulai kizhangu

அடுப்பில் கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில் கடலைப்பருப்பு போட்டு, முக்கால்வாசி சிவந்ததும் அதன் பின்பாக கடுகு, சோம்பு, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் இந்த வரிசையில் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பாக, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, பொட்டுக்கடலை பொடியை, ஒரு ஸ்பூன் எடுத்து, 1/2 டம்ளர் அளவு தண்ணீரில் கரைத்து வாணலில் ஊற்றவேண்டும். அதோடு மசாலாவிற்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி விடுங்கள். இப்போது 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் உருளைக்கிழங்கிலும் உப்பு இருக்கும். குறைவான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

அந்த பொட்டுக்கடலையின் வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். 2 நிமிடங்கள் கொதிக்கட்டும். அதன் பின்பு வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை கடாயில் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து, தட்டு போட்டு மூடி கொதிக்க வைத்தால் போதும். சுவையான சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் மசாலா ரெடி. கீழே இறக்கிவிட்டு கொத்தமல்லி தழையை தூவி விடுங்கள்.

Masala

சில பேருக்கு ஹோட்டல் ஸ்டைலில் சமைப்பது என்பது பிடிக்காது. வீட்டு கை பக்குவம் தேவை என்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பொட்டுக்கடலை மாவை தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக வேக வைத்த உருளைக்கிழங்கில் இருந்து, ஒரு உருளைக்கிழங்கை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொழகொழவென்று அரைத்து, மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து விடுங்கள். இப்போது பொட்டுக்கடலை சேர்த்த மாதிரியே மசாலா கொழகொழவென்று மாறிவிடும். பொட்டுக்கடலை  பிடிக்காதவர்கள் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம். சிலபேர் பொட்டுக்கடலைக்கு பதிலாக கடலைமாவு சேர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடலை மாவு சேர்ப்பதை விட, பொட்டுக்கடலை மாவு சேர்க்கும்போது மசாலாவின் சுவை அதிகரிக்கும்.