தினமும் காலை விடிந்தால் போதும், சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு குழம்பு, பொரியல் என்று தவறாமல் செய்து வைப்பது பெண்களின் கடமையாக இருக்கும். அவ்வாறு தினமும் ஒரு குழம்பு, காய் செய்வதில் சற்று குழப்பமான நிலையில் தான் பெண்கள் இருக்கின்றனர். ஏன் என்றால் ஒரே மாதிரி சமைக்காமல் ஒவ்வொரு நாளும் புது வித சுவையில் சமைக்க வேண்டி இருந்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள். ஒவ்வொரு உணவையும் ஒரே மாதிரி சமைக்காமல் விதவிதமான சுவையோடு சமைத்து கொடுத்தால் மட்டுமே வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் சாப்பிடுவார்கள். அவ்வாறு பெண்கள் அடிக்கடி புதுவிதமான சுவையை ட்ரை செய்வதென்பது வழக்கமான விஷயம் தான். அதேபோல் ஹோட்டல் சுவையில் இருக்கும் குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனையும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு, அதன் உட்புறம் இருக்கும் இரண்டு லேயரை மட்டும் தனியாக எடுத்து சற்று அகலமான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதேபோல் குடை மிளகாயையும் அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீதமிருக்கும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் 3 தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்றாக சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு அதே எண்ணெயில் சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து அவை எண்ணெயில் குழைந்து வேகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இவற்றுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் போதும். சுவையான குடைமிளகாய் கிரேவி சட்டென தயாராகிவிடும்.