உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

Guperan
- Advertisement -

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.
guperan

உலகின் அத்தனைச் செல்வங்களும் குபேரனிடம் வந்த காரணம் என்ன ?….சிவபெருமானே குபேரனை செல்வத்தின் அதிபதியாக நியமித்த காரணம் என்ன?… அத்தனை சிறப்புக்குரிய பெருமையை பெற்றவரா குபேரன்? அந்த கதையைத்தான் நாம் இங்கே காண இருக்கிறோம்.

நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன் ஆண்டு வந்தார். ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக்கொண்டான்.

- Advertisement -

kubera

நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடுதோறும் அலைந்துகொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள். அதன்படி பெண் தேடவும் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை. பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார். சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம்தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். நாளடைவில், பல தலங்களில் தங்கியிருந்து தவம் இயற்றவும் செய்தார்.

gupera

இப்படி ஊர் ஊராகச் சுற்றிவரும் வேளையில், இறுதியாக காசி மாநகருக்கு வந்து சேர்ந்தார் வைஸ்ரவணன். அந்த நகரின் அமைதியையும் பெருமையையும் கண்ட அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா… `அகில உலகத்துக்கும் நாயகன்’ எனப் பெயர் கொண்ட விஸ்வநாதரைக் கண்டதும் தனது வாழ்வின் அர்த்தமே விஸ்வநாதரை துதிப்பதுதான் என எண்ணிக்கொண்டார். பெண் தேடி வந்த நோக்கத்தைக்கூட மறந்து, சிவ தியானத்தில் மூழ்கிவிட்டார். ஒன்றா இரண்டா… எண்ணூறு ஆண்டுகளைக் கடந்த தவம் என்கிறது புராணம். அத்தனை ஆண்டுகளாக, எந்த நோக்கமும் இன்றி, பல இடையூறுகளைத் தாண்டி வைஸ்ரவணனின் தவம் தொடர்ந்தது.

- Advertisement -

எதற்காகத் தவம் செய்கிறார் என்ற காரணமே தெரியாமல் தேவர்களும் குழம்பினர். ஆனாலும், அவருக்கு இடையூறு எதுவும் செய்யாமல்விட்டுவிட்டனர். காலம் செல்லச் செல்ல அவரின் தவத்தின் பயனாக எழுந்த அக்னிச் சூடு கயிலாயத்தையும் தொட்டது. பரம்பொருளான ஈசன், இனியும் தாமதிக்கக் கூடாது என வைஸ்ரவணனுக்கு அருள்புரியக் கிளம்பினார். அப்போது அன்னை உமாதேவி, தானும் அந்த எளிய பக்தனை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவசியைக் காண விரும்புகிறேன் என்று கூறி சிவனோடு கிளம்பினார்.

kubera

கடும் தவம் இயற்றிய வைஸ்ரவணன் முன்பு தோன்றிய சிவனும் பார்வதியும் அவரை அன்பு கனிய அழைத்தனர். அம்மையப்பரின் குரல் கேட்டு தவத்தில் இருந்து விடுபட்டார். இழந்துபோன இலங்கைக்கு பதிலாக அவருக்கு அழகாபுரி பட்டணத்தையே சிவன் உருவாக்கித் தந்தார். உலகத்து நிதிகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை `குபேரன்’ என்ற பெயரோடு விளங்கச் செய்தார்.

- Advertisement -

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பதை அறிய இதை கிளிக் செய்து படியுங்கள்

வடக்கு திசைக்கு அவரை அதிபதியாக்கி, அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக்கினார். செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக குபேரனை நியமித்தார் சிவன். சித்திரரேகை எனும் மங்கையை மணமுடித்துத் தந்து அவரை ஆசீர்வதித்தார். சிவபெருமானுக்குப் பிரியமான நண்பனாக குபேரன் மாறினார். இதனால் `சிவசகா’ என்ற பெயரையும் கொண்டார்.

kuberan

எந்த எதிர்பார்ப்பும் இன்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலகத்து நிதிகளை எல்லாம் குபேரன் பெற்றார். தனக்கென ஒன்றையுமே எதிர்பாராத குபேரனின் தியாகச் செயலைப் போற்றியே அவர் தேவருலகின் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெற்றார். அது மட்டுமா? காக்கும் கடவுளான திருமாலின் அம்சமான வெங்கடாசலபதிக்கே கடனும் கொடுத்தார் குபேரன். எனவே, நியாயமான நேர்மையான எவருக்கும் நிச்சயம் உயரிய பொறுப்புகள் வந்தே தீரும். காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், கட்டாயம் தன்னலம் கருதாத பண்பாளர்களுக்கு சிறப்புகள் வந்தே சேரும் என்பதையே குபேரனின் கதை நமக்கு உணர்த்துகிறது.

மேலும் பல சுவாரசியமான குட்டி கதைகள்  மற்றும் சிறுகதைகளை படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.
- Advertisement -