செம்ம சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி உங்களுக்காக! 10 நிமிடத்தில் இஞ்சி பூண்டு சேர்த்த கலவை சாதம் எப்படி செய்வது?

poondu-sadam

சாதம் வடித்து வைத்து விட்டால் போதும். வெறும் பத்தே நிமிடத்தில் இந்த இஞ்சி பூண்டு கலவை சாதத்தை செய்துவிடலாம். லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்தால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் இது இருக்கும். அதேசமயம் நாவிற்கு ருசி தரக்கூடிய ஒரு ரெசிபி ஆகவும் இருக்கும். நம்முடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கலவை சாதத்தை எப்படி செய்வது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா? காலையில் அவசர அவசரமாக லன்ச் பாக்ஸ் தயார் செய்யும் குடும்ப தலைவிகளுக்காக இந்த ரெசிபிய இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

rice

முதலில் 2 கப் அளவு வெள்ளை சாதத்தை உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்து ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். (வடித்த சாதம் – 2 கப்) அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தோலுரித்த பூண்டு – 10 பல் (முழு பூண்டை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்) காய்ந்த மிளகாய் – 6, இந்த இரண்டு பொருட்களையும் கடாயில் சேர்த்து எண்ணெய் ஊற்றாமல், பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடி கொஞ்சம் கொர கொரப்பாக தான் கிடைக்கும்.

அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, 1 டேபிள்ஸ்பூன் அளவு இஞ்சி துருவலைச் சேர்த்து, இஞ்சியின் பச்சை வாடை போகாத அளவிற்கு, வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

இப்போ சாதத்தை எப்படி தாளிப்பது என்று பார்த்துவிடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை – 1 கொத்து, இவைகளைப் போட்டு வதக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் சிவந்தவுடன் பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1, கடாயில் சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்கி நெய்யில் வதக்கி வைத்திருக்கும் இஞ்சி துருவல் வெங்காயத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதும்.

அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் பூண்டு விழுதையும் கடாயில் சேர்த்து விடுங்கள். இப்போது தேவையான அளவு உப்பை தூவி 1 முறை கிளறி, வடித்து வைத்திருக்கும் சாதத்தை கடாயில் சேர்த்து பக்குவமாக கலந்து விடவேண்டும். உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். சாதமும், கடாயில் இருக்கும் மசாலாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடாக வேண்டும்.

poondu-sadam2

இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் சுடச்சுட இஞ்சி பூண்டு சாதம் சூப்பராக கமகம வாசத்துடன் தயாராகியிருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நாளைக்கு உங்களுடைய வீட்டில் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி நீங்களும் செஞ்சு டேஸ்ட் பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். நாவிற்க்கு சுவை மட்டும் இல்லைங்க! உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் இஞ்சி பூண்டை எல்லாம் சேர்த்து இருக்கின்றோம். ட்ரை பண்ணி பாருங்க!