இன்ஸ்டன்ட் இட்லி ரெசிபி

idli
- Advertisement -

நம்முடைய வீடுகளில் எல்லாம் இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்றால் டிபன் வேலையே ஓடாது. காலையில் என்ன செய்வது, இரவு என்ன செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும். இனிமே உங்க வீட்டில மாவு இல்லை என்றால் கவலையே பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இன்ஸ்டன்டாக புசுபுசுன்னு பத்து நிமிடத்தில் இட்லி சுட்டு எடுக்கலாம். ரெசிபி தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்

- Advertisement -

அவல் – 1 கப்
சிறிய ரவை – 1 1/2 கப்
தயிர் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் அவல் சேர்த்து ஓரளவுக்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. ஒரு அகலமான பவுல் எடுத்துக்கோங்க அதில் அரைத்து வைத்திருக்கும் அவல், ரவை, தயிர், தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். முதலில் தண்ணீரை 1 கப் அளவு ஊற்றி கரைத்து, பிறகு மீதம் இருக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த கப்பில் ரவையை அளந்து எடுத்துகிறீர்களோ, அதே கப்பில் அவல், தயிர், தண்ணீர், போன்ற மற்ற பொருட்களையும் அளக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவை திக்கான பதத்தில் கரைத்து ஒரு மூடி போட்டு பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மாவை பார்த்தால் இன்னும் கொஞ்சம் இறுகி கட்டி பிடித்திருக்கும்.

ரவை தண்ணீரை எல்லாம் உறிஞ்சி இருக்கும். அதனால் மிகக் குறைந்த அளவு இந்த மாவில் தண்ணீரை ஊற்றி, சோடா உப்பு போட்டு மீண்டும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். மாவை அள்ளி இட்லி தட்டில் வைக்கும் அளவுக்கு மாவு கட்டியாக இருக்க வேண்டும். கவனம் தேவை. மாவு கொஞ்சம் தண்ணீர் ஆகி விட்டாலும் இட்லி கொல கொலன்னு வரும். சாப்பிட ருசி இருக்காது.

- Advertisement -

இப்போது வழக்கம் போல இட்லி வார்க்கலாம். இட்லி தட்டின் மேல் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி தடவி, இந்த மாவை அள்ளி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்த பிறகு இட்லி தட்டை, இட்லி பானையில் வைத்து, மூடி போட்டு பத்திலிருந்து 12 நிமிடங்கள் வேக வைக்கவும். மிதமான தீயில் வைத்து இட்லியை வேக வையுங்கள்.

பத்து நிமிடம் கழித்து ஒரு ஸ்பூனை இட்லிக்கு உள்ளே குத்தி பாருங்க. அந்த ஸ்பூனில் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி வெந்து விட்டது என்று அர்த்தம். இல்லை என்றால் மீண்டும் ஒரு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் இட்லியை வேக வைக்கவும். இட்லி வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு, இட்லியை எடுத்து சூடாக பரிமாறி பாருங்கள். இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார், காரச் சட்னி எது வேண்டுமென்றாலும் சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நாவல் பழ ரசம் செய்முறை

சில பேருக்கு ஆப்ப சோடா மாவு சேர்ப்பது பிடிக்காது. தேவையில்லையென்றால் ஆப்ப சோடாவை தவிர்த்துக் கொள்ளலாம். ஆப்ப சோடா போடாமல் இட்லி வார்த்தால் இட்லியானது ரொம்பவும் சாஃப்பிட்டாக உப்பி கிடைக்காது. கொஞ்சம் கல்லு போல பதத்தில் வரும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -