இறந்து 3 நாட்கள் கழித்து உயிர் பெற்று எழுந்த சாய் பாபா – ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

sai-Baba-2-1

இறைவனின் தூதர்களாக மனித வடிவில் இந்த பூமியில் அவதரிப்பவர்கள் “மஹான்களும், ஞானிகளும்”. தெய்வத்தின் அம்சமாக அவர்கள் இருப்பதால் அவர்கள் மனித சக்தியை மிஞ்சும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி “ஷீர்டி” என்ற புனித பூமியில் வாழ்ந்த “ஸ்ரீ சாய் பாபா” புரிந்த ஒரு அற்புதத்தைப் பற்றி இங்கு காண்போம்.

Sai baba

ஒரு முறை சாய் பாபா தன் ஆத்ம சீடரான “மஹாலசாபதியிடம்” தான் தன் உடலை விடுத்து “அல்லா” ஆகிய இறைவனிடம் செல்ல போவதாகவும், எனவே மூன்று நாட்கள் வரை தன் உடலை பாதுகாக்குமாறும், அப்படி தான் மூன்று நாட்களுக்கு மேலாகியும் உயிர்தெழவில்லை என்றால் தான் இறந்து விட்டதாக கருதி, தனது உடலை அடக்கம் செய்து விடுமாறு கூறி தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திலேயே அவரின் உடலசைவுகள் நின்றது. அவரது மூச்சுக்காற்றும், இதயத் துடிப்பும் நின்றுவிட்டது. மனிதர்களின் விதிப்படி அவர் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்டு அவர் இருந்த மசூதிக்கு முன்பு ஏராளமான அவரது பக்தர்கள் கூடி பாபா உயிர்தெழ மவுனமாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மூன்றாம் நாள் இவ்விஷயம் ஷீர்டி ஊரிருந்த மாவட்டத்தின் ஆட்சியருக்கும் அந்த ஊரின் காவல் துறையினருக்கும் எட்டியது. உடனே அவர்கள் அனைவரும் பாபாவின் உடலிருந்த ஷீர்டி மசூதிக்கு வந்தனர். ஒரு மருத்துவரைக் கொண்டு பாபாவின் உடலை சோதித்தனர். அவரது உடலை சோதித்த அந்த மருத்துவரும் பாபா இறந்துவிட்டதாக அறிவித்தார்.

Sai Baba

இதன் பிறகு அந்த ஆட்சியரும், காவல் துறையினரும் பாபா இறந்துவிட்டதால் அவரது உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி அவரின் பக்தர்கள் அவரது உடலை அடக்கம் செய்யாத பட்சத்தில் தாங்களே அவரின் உடலை அடக்கம் செய்யப்போவதாக கூறினர்.

இதைக் கேட்ட பாபாவின் சீடரான மஹல்சாபதியும் மற்ற பக்தர்களும் பாபா நிச்சயம் உயிர்த்தெழுவார் எனக் கூறி அந்த அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது நடந்து கொண்டிருக்கும்போதே பாபாவின் உடலில் அசைவுகள் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல் உயிர் பெற்று எழுந்தார் பாபா. இதைக்கண்ட அந்த அரசு அதிகாரிகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். பாபாவின் பக்தர்களோ மகிழ்ச்சியடைந்தனர். சாய் பாபாவின் இந்த சித்தாற்றலைக் கண்டு அதிசயித்த அந்த ஆட்சியர் அதைப் பற்றிய குறிப்பை அக்கால அரசு ஆவணத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிகழ்வுக்கு பிறகு பாபாவின் புகழ் இந்தியா முழுதும் பரவியது.

இதையும் படிக்கலாமே:
தன் பக்தர்களுக்காக மழையை நிறுத்திய சாய் பாபா – உண்மை சம்பவம்

இது போன்ற மேலும் பல சாய் பாபா கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான நீதி கதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.