அட இந்த மாவில் கூடவா முறுக்கு சுடுவாங்க? சப்பாத்தி மாவு போல இந்த மாவை பிசைந்தால், சத்து நிறைந்த மொறு மொறு முறுக்கு 10 நிமிடத்தில் தயார்.

murukku_tamil
- Advertisement -

பொதுவாக அரிசி மாவு, கடலை மாவு, பயன்படுத்தி தானே முறுக்கு செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சத்து நிறைந்த சோள மாவை பயன்படுத்தி முறுக்கு செய்யப் போகின்றோம். சோள மாவு என்றால் கான்பிளவர் மாவு கிடையாது. சின்ன சின்ன சோளம் தானியம் இருக்கும் அல்லவா, அதை வாங்கி அரைத்து சலித்து சோள மாவு எடுத்து முறுக்கு சுடலாம். அப்படி இல்லை என்றால் இப்போது சூப்பர் மார்க்கெட்டில் இந்த சோளமாவு கிடைக்கிறது. இதை jowar flour என்று கூட ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதை வாங்கிக் கொண்டாலும் இந்த முறுக்கு செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த, புரதச்சத்து நிறைந்த, இந்த சோளமாவில் முறுக்கு சுட்டுக் கொடுங்க. ஸ்னாக்ஸ் சாப்பிட்டது போலவும் இருக்கும். உடம்புக்கு சத்து கிடைத்தது போலவும் இருக்கும். சுலபமான முறையில் சோள மாவு முறுக்கு செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

சோள மாவு – 3 கப், கடலை மாவு – 1/2 கப், அரிசி மாவு – 1/2 கப், எள்ளு -2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், ஓமம் அல்லது சீரகம் உங்களுக்கு எது பிடிக்குமோ அது – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து விடுங்கள். 3 கப் சோள மாவு என்றால் 500 கிராம் சோளமாவு இருக்கும். (உப்பு காரம் சரியா இருக்கான்னு இந்த மாவ லேசா வாயில் போட்டு பார்த்தாலே தெரியும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு காரத்தையும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.)

- Advertisement -

அதன் பின்பு இதில் தேவையான அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து சப்பாத்தி மாவு போலவே பிசைந்து மாவை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் முறுக்க பிழிய வராது. மாவு ரொம்பவும் தளதளவென ஆகிவிட்டால் முறுக்கு எண்ணெய் குடிக்கும். மொறுமொறுவென கிடைக்காது. ஆகவே முறுக்கு மாவை சரியான பக்குவத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக முறுக்கு மாவு என்றால் அதில் சுட சுட எண்ணெய் ஒரு குழி கரண்டி, அல்லது உருக்கிய வெண்ணெய் அல்லது டால்டா இந்த பொருட்களை எல்லாம் நாம் சேர்ப்போம். இதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருக்கி ஊற்றிக் கொள்ளலாம். அல்லது காய்ச்சிய எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். ஆனால் எதுவுமே சேர்க்கவில்லை வெறும் தண்ணீர் ஊற்றி பிசைந்தாலும் இந்த முறுக்கு மொறுமொறுப்பாக சூப்பராக கிடைக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, முறுக்கு பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, காய விடுங்கள். அதன் பின்பு தயார் செய்த இந்த முறுக்கு மாவை சிறிய சிறிய பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் முறுக்கு அச்சுக்கு உள்ளே எண்ணெய் தடவி ஸ்டார் அச்சு, தேன் குழல் அச்சு, அல்லது ரிப்பன் பக்கோடா அச்சு எதை வேண்டும் என்றாலும் உங்கள் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறுக்கு மாவை அச்சில் போட்டு வழக்கம் போல முறுக்கு பிழிந்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான முறுக்கு தயார்.

இந்த முறுக்கு நன்றாக ஆறிய பின்பு மொறுமொறுப்பாக சூப்பரான சுவையில் இருக்கும். இந்த மழைக்காலத்துக்கு சூப்பர் ஸ்னாக்ஸ் செய்து டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். பிரச்சனையே கிடையாது. ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -