கடன் என்றாலே அதனால் பிரச்சனைகள் தான். கடனை வாங்கினாலும் பிரச்சினைதான். கடனை கொடுத்தாலும் பிரச்சினைதான். ஒரு முறை கடனை வாங்கி விட்டோம் என்றால் அதை உடனே அடைத்து விட வேண்டும். அப்படி செய்யாமல் அதை அதிகரித்துக் கொண்டே சென்றால் வாழ்க்கையில் நிம்மதி என்பது முற்றிலும் இருக்காது. இந்த கடன் பிரச்சனைக்கு முழுமுதற் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு முருகப்பெருமானுக்கு எந்த முறையில் தாந்திரீக பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர தாந்திரீக பரிகாரம்
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் கண்டிப்பான முறையில் கடன் என்னும் பெரிய இருளுக்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வெளிச்சத்தை காட்டும் வகையில் உதவக்கூடியது தான் முருகப்பெருமானின் வழிபாடு. பலரும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்து, கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வருவதை கேள்விப்பட்டிருப்போம். அப்படி முயற்சி செய்தும் தங்களால் அந்த கடன் சுமையிலிருந்து வெளியே வர முடியவில்லை என்பவர்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நமக்கு 100 ரூபாயும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு இருந்தால் போதும். இந்த பரிகாரத்திற்கு நாம் நம்முடைய வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திர நாள் அன்று செல்ல வேண்டும்.
நம் அனைவருக்கும் அறுபடை வீடுகள் தெரியும். திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி இந்த ஆறு கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த கோவிலுக்கு விசாக நட்சத்திர நாளன்று செல்ல வேண்டும். விசாக நட்சத்திர நாள் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து விரித்து அதில் 100 ரூபாயை வைத்து அந்த 100 ரூபாய்க்குள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பையும் வைத்து மூட்டையாக கட்டிவிட வேண்டும். இந்த முடிச்சை கையில் வைத்துக்கொண்டு முருகப் பெருமானை மனதார வழிபட வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த முடிச்சை முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட வேண்டும். தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் நாள் வரை தினமும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
விசாக நட்சத்திர நாளன்று எந்த கோவில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறதோ அந்த கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த முடிச்சையும் எடுத்துக்கொண்டு போய் முருகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு கோவிலில் இருக்கக்கூடிய உண்டியலில் அந்த மூட்டையை சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க வராகி அம்மன் மந்திரம்
இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் கடன் தீர அதற்குரிய வழிகள் கிடைக்கும். அந்த வழிகளை முறையாக பயன்படுத்தி கடன் சுமையிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.