பால தேவராயன் சுவாமிகள் அவர்கள் நமக்கு அருளிய இந்த கந்த சஷ்டி கவசத்தின் மகத்துவத்தை பற்றி முருக பக்தர்களுக்கு சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியமே இல்லை. கந்த சஷ்டி கவசத்தை படித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒவ்வொரு மிருக பக்தர்களுக்கும் நன்றாகவே தெரியும். நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர, அந்த முருகப்பெருமானின் நேரில் தரிசனம் செய்ய இந்த கலியுகத்தில் ஒரு வழி இருக்கிறது என்றால் அது இந்த கந்த சஷ்டி கவசம் தான்.
ஆனால் இந்த சஷ்டி விரதத்தில் தினம்தோறும் 36 முறை சஷ்டி கவசம் படிக்க வேண்டும், அப்போதுதான் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்று சொல்கிறார்களே, இன்றைய சூழ்நிலையில், கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு 36 முறை படிப்பது சாத்தியமா. பிறகு எதற்காக அந்த சஷ்டி கவசத்தில் ‘ஒரு நாள் முப்பத்தாறு உருக்கொண்டு ஓதியே ஜபித்து’ என்ற வரி இடம் பெற்று இருக்கிறது. நீங்கள் யாராவது கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளில் 36 முறை படித்துள்ளீர்களா. கமெண்ட் செய்யுங்கள்.
36 முறை சஷ்டி கவசத்தை படிக்க முடியுமா என்று சந்தேகத்தோடு கேள்வி எழுப்பவில்லை. கட்டாயமாக ஒரு உண்மையான முருக பக்தனுக்கு இது சாத்தியம். ஆனால் இன்றைய கலியுகத்தில் இது சாத்தியமா என்பதுதான் நமக்கான சந்தேகம்.
கந்த சஷ்டி கவசத்தில் மொத்தம் 238 வரிகள் இருக்கிறது. சரளமாக அந்த பாடலை வேகமாக பாடினாலும் 15 நிமிடங்கள் எடுக்கும், ஒருமுறை கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கு. அப்படி கணக்குப் போட்டாலும் ஒரு நாளைக்கு, 8 மணி நேரத்தில் இருந்து 9 மணி நேரம் ஒதுக்கும் பட்சத்தில் தான் ஒருவரால் இந்த கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க முடியும்.
அது இன்றைய சூழ்நிலைக்கு நிச்சயம் ஒத்து வராத விஷயம். பிறகு எதற்காக பாலதேவராய சுவாமிகள் அவர்கள் சஷ்டி கவசத்தின் இப்படி ஒரு வரியை வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா. இதற்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த விஷயத்தை இந்த மகா கந்த சஷ்டி விரத நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.
உங்களால் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை ஆறு முறை படித்தாலே போதும். கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படித்த பலனை முழுமையாக பெற முடியும். 36 அக்ஷரங்களைத் தான் பாலதேவராய சுவாமிகள் அவர்கள் அந்த சஷ்டி கவசத்தில் குறிப்பிட்டுள்ளார். அது எப்படி தெரியுமா.
சஷ்டி கவசம் முழுமையாக படித்த பலன் பெற சொல்ல வேண்டிய மந்திரம்
சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப
இந்த 6 வரி மந்திரத்தில் மொத்தம் 36 அக்ஷரங்கள் இருக்கின்றன. அதாவது 36 எழுத்துக்கள். ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை ஒரு முறை சொன்னால் சஷ்டி கவசத்தை ஒரு முறை படித்த புண்ணியத்தை நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 36 அக்ஷரங்கள் தான் பால தேவராய ஸ்வாமிகள் அவர்கள் ‘ஒரு நாள் முப்பத்தாறு உருக்கொண்டு ஓதியே ஜபித்து’ என்ற வார்த்தைகளால் சஷ்டி கவசத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த எளிமையான மந்திரத்தை படிப்பதில் ஒன்றும் நமக்கு சிரமம் இல்லையே. நாளை நீங்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால், இந்த ஆறு வரி மந்திரத்தை, ஆறு முறை படியுங்கள். அந்த முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் அந்த சஷ்டி கவசத்தை 36 முறை படித்த புண்ணியமும் உங்களை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: கண்ணேறு நீங்க வழிபாடு
நாளைய தினம் சஷ்டி விரதம் ஆறாவது நாள் விரதம் இருப்பவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளபடி அமையும் என்று நம்புகின்றோம். அதற்காக இந்த மந்திரத்தை மட்டும் படித்துவிட்டு சஷ்டி கவசத்தை படிக்காமல் விடக்கூடாது. காலையில் ஒரு முறை, மதியம் ஒரு முறை, மாலை ஒரு முறை, இரவு ஒரு முறை, நான்கு முறை கந்த சஷ்டி கவசத்தை படித்துவிட்டு பிறகு இந்த மந்திரத்தை சொல்லும்போது உங்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவல் உடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.