சட்னியை தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டாம் இப்படி கார தோசை செய்து பாருங்கள் 10 தோசை இருந்தாலும் பத்தாமல் போய்விடும்!

kara-dosai3
- Advertisement -

ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம் இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூட தேவையில்லை. ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான கார தோசை எப்படி நம் கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

கார தோசை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
தோசை மாவு – தேவைக்கு ஏற்ப, பெரிய வெங்காயம் – 3, பழுத்த தக்காளி பழங்கள் – நான்கு, பூண்டு பல் – 10, வர மிளகாய் – ஆறு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கார தோசை மசாலா செய்முறை விளக்கம்:
கார தோசை செய்வதற்கு முதலில் மசாலா தயாரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மூணு பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து நான்கைந்தாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதே போல பழுத்த தக்காளி பழங்களை நன்கு சுத்தம் செய்து காம்பு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள்.

இதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை காம்பை நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். 10 பூண்டு பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. பின்னர் அடுப்பில் ஒரு வானலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். கார தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலையை ஒரு கொத்து உருவி தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் தூவி கொள்ளுங்கள். அரைத்து வைத்த மசாலாவை இப்போது இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் சேர்க்காததால் மேலே தெறிக்கக்கூடும் எனவே அடுப்பை சிம்மில் வைத்து கிண்டி விட்டுக் கொண்டே இருங்கள். எண்ணெய் பிரிய மசாலா கெட்டி ஆனதும் அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்தில் மசாலாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே தோசை உடன் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம், ரொம்பவே ருசியாக இருக்கும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை காய விடுங்கள். தோசை கல் நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்றரை குழி கரண்டி மாவை எடுத்து நன்கு மெல்லியதாக பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது இந்த கார சட்னியை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு பரவலாக தேய்த்து விடுங்கள். பின் தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்தால் போதும், சூப்பரான கார தோசை மொறு மொறுன்னு தயாராகி இருக்கும். இதற்கு சட்னியே தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம் ருசியாக இருக்கும்.

- Advertisement -