ஸ்ரீ கற்கடேஸ்வரர் கோவில் சிறப்புகள்

Sivan temple

ஆடி மாதத்தைக் `கடக மாதம்’ என்பார்கள். கடகம் என்றால் நண்டு. ஆக, கடக மாதத்தில் கடகம் வழிபட்ட ஒரு திருக்கோயிலைத் தரிசிப் போமா? கும்பகோணம் – பூம்புகார் சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருவிசநல்லூர் ரிஷபக் கோயில்.

temple mantra

அங்கிருந்து சுமார் 2 கி.மீ.தொலைவிலுள்ளது திருந்துதேவன்குடி. இங்கு, மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகற்கடேஸ்வரர். இந்தக் கோயில் குறித்த புராணக் கதைகள் சிலிர்க்க வைப்பவை.

முற்காலத்தில் ஈசனின் சாபத்தின் காரணமாக நண்டாக மாறிய அம்பிகை, இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.

இந்த நிலையில், தான் அகழியில் மலரச்செய்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு கோபம் கொண்டான் இந்திரன். தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

Ambigai

நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு மனம் திருந்தினான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டதாகத் தல வரலாறு. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். இன்னொரு திருக்கதையும் உண்டு.

கடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருக்கோயில்!

கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை ஆகிய நாள்களும் வழிபடுவதற்கு உகந்தவை. இந்தத் தலத்துக்கு வந்து கற்கடேஸ் வரரையும் அருமருந்து நாயகியையும் அர்ச்சனை செய்து வழிபட்டு, அபிஷேகம் செய்த நல்லெண்ணெயை உட்கொண்டால், நோய்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

Advertisement

sivan lingam

முன்பே கூறியது போல கடக மாதமான ஆடி மாதத்தில் இந்த கோயிலிற்கு சென்று தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவார் ஸ்ரீகற்கடேஸ்வரர் என்பது நம்பிக்கை. ஆகையால் கடக ராசிக்கார்கள் மட்டும் இன்றி அனைத்து ராசிக்காரர்களும் இந்த மாதம் ஸ்ரீகற்கடேஸ்வரர் கோயிலிற்கு சென்று அவரது அருளாசியை பெறலாம்.

தலத்தின் பெயர்: திருந்துதேவன்குடி (காவிரியின் வட கரையில் அமைந்திருக்கும் 42-வது தலம் இது)

இறைவன்: ஸ்ரீகற்கடேஸ்வரர்

அம்பிகை: ஸ்ரீஅருமருந்து நாயகி மற்றும் ஸ்ரீஅபூர்வ நாயகி

வழிபட்டவர்கள்: அம்பிகை, இந்திரன், கந்தர்வன்

தலவிருட்சம்: பஞ்சதள வில்வம்

தீர்த்தம்: நவபாஷாண தீர்த்தம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

நடைதிறப்பு : காலை 9 முதல் மதியம் 2 மணி வரை; மாலை 4 முதல் இரவு 6 மணி வரை.

எப்படிச் செல்வது?
கும்பகோணம் – பூம்புகார் சாலையில் கும்ப கோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருவிசநல்லூர் ரிஷபக் கோயில். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது திருந்துதேவன்குடி.

இதையும் படிக்கலாமே:
தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.