அவசர அவசரமா சமைக்கும்போது இட்லிக்கு தொட்டுக்கொள்ள, தோசைக்கு தொட்டுக்கொள்ள, சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட கத்திரிக்காயை வைத்து ஒரு பச்சடி எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப ஈசியா குக்கர்ல எல்லா பொருட்களையும் போட்டு 3 விசில் வச்சா போதும்ங்க. வேலை முடிஞ்சது. இந்த கத்தரிக்காய் பச்சடியின் டேஸ்ட்டுக்கு எந்த குறைவும் இருக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சூப்பர் ரெசிபியும் கூட. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த குக்கரில் ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பை தண்ணீருடன் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கொஞ்சம் பெரியதாக வெட்டிய கத்தரிக்காய் – 1/4 கிலோ, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 12 லிருந்து 15 பல், மீடியம் சைஸ் தக்காளி – 2 கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கியது, தோல் உரித்த பூண்டு பல் – 4, பச்சைமிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை எல்லாம் குக்கரில் போட்டு இந்த பொருட்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 விசில் வைத்தால் போதும் உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் சரியான பக்குவத்தில் வெந்து வெந்திருக்கும்.

இப்போது குக்கரில் நமக்கு கத்தரிக்காய் பருப்பு அனைத்தும் சேர்ந்து வெந்து தயாராகிவிட்டது. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம் வடகம் தாளிக்க வேண்டும். உங்கள் வீட்டில் வெங்காய வடகம் இல்லை என்றால் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு பொரிய விட்டு வர மிளகாய் – 1, கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து குக்கரில் வெந்து தயாராக இருக்கும் கத்தரிக்காய் விழுதை கடாயில் ஊற்றி, பச்சடிக்கு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு குழி கரண்டியை வைத்து இந்த பச்சடியை நன்றாக மசித்து விடவேண்டும்.
குக்கரில் நாம் போட்ட கத்தரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தும் 80 சதவிகிதம் குழைய வேண்டும். தாளிப்பில் இந்தப் பச்சடி இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்து விடுங்கள்.

சூப்பரான கத்தரிக்காய் பச்சடி தயார். மேலே கொத்தமல்லித் தழைகளைத் தூவி, சுடச்சுட பரிமாறி பாருங்கள். எல்லோரும் இஷ்டமாக சாப்பிடுவார்கள்.