மணக்க மணக்க பாரம்பரிய கீரை கடையல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க மண்மணம் மாறாமல் ருசிக்க ருசிக்க சாப்பிடுவீங்க!

arai-keerai-paruppu-kadaiyal
- Advertisement -

கீரை கடையல் என்றாலே எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்தமான ஒரு உணவு வகை ஆகும். கீரையை பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடாதவர்கள், இது போல கடையல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். பாரம்பரிய கீரை கடையல், பருப்பு போட்டு எப்படி ரொம்ப சுலபமாக, சுவையாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
கீரை – மூணு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, பாசி பருப்பு – 100 கிராம், பூண்டு பல் – 6, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, சீரகம் – அரை ஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், வரமிளகாய் – இரண்டு.

- Advertisement -

கீரை கடையல் செய்முறை விளக்கம்:
கீரை கடையல் செய்வதற்கு முதலில் 100 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பை நன்கு கழுவியில் சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் ஊறினால் போதும். பின் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு நான்கைந்து முறை தண்ணீர் விட்டு அலசி தண்ணீரை உதறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு குக்கர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், நல்லெண்ணை கொஞ்சம் சேருங்கள், எண்ணெய் கீரையின் பசுமை மாறாமல் காக்கும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு பச்சை மிளகாயை முழுதாக அப்படியே சேருங்கள். பூண்டு பற்களை தோல் உரித்து சேர்க்க வேண்டும். பின்னர் சீரகம் சேர்த்து கீரைக்கு தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு சுத்தம் செய்து வைத்துள்ள கீரைகளை சேர்த்து குக்கரை மூடி வைத்து மூன்றிலிருந்து, நான்கு விசில் வரை விட்டு எடுங்கள்.

- Advertisement -

உங்கள் குக்கரின் ஆற்றலுக்கு ஏற்ப நீங்கள் விசில் விட வேண்டும். பின்னர் மூடியை திறந்தால் பூ போல கீரை மற்றும் பருப்பு நன்கு வெந்து வந்திருக்கும். அதில் அதிகப்படியாக இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு, நன்கு மத்து போட்டு கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரையும் சேர்த்து இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், நறுக்கிய வெங்காய துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் சிறிதளவு பெருங்காயத்தூள் தூவி, வர மிளகாய்களை கிள்ளி சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து கீரையுடன் தாளித்தம் செய்ய வேண்டும். கீரையை நன்கு கலக்கி சுட சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு சுவையாக இருக்கும். பாரம்பரிய மண்மணம் மாறாத இந்த கீரை கடையல் நீங்களும் செஞ்சு பார்த்து அசத்துங்க.

- Advertisement -