எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அந்த தெய்வத்தின் அருள் இருந்தால்தான் நம்மால் வழிப்படவே முடியும் என்று கூட கூறலாம். அந்த தெய்வம் மட்டும் அல்லாமல் குலதெய்வத்தின் அருளும் நமக்கு வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய விரதமும் வழிபாட்டு முறையும் நல்ல பலனை பெறும். அந்த வகையில் முருகப்பெருமானின் அருளால் தைப்பூச நாளன்று எந்த தீபங்களை வீட்டில் ஏற்றினால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கோடீஸ்வர யோகம் தரும் தைப்பூச தீபம்
தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மிகவும் பிரசித்தி பெற்ற நாட்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையும் அதே சமயம் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசமும் பவுர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம். அந்த வழிபாட்டோடு சேர்த்து எந்த தீபங்களை ஏற்ற வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.
இந்த தீபங்களை செவ்வாய் ஹோரையில் ஏற்றுவது சிறப்பு. அதாவது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள், அதைப்போல் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் ஏற்றலாம். மாலை 5:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளும் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம். செவ்வாய்க்கிழமை மூன்று நேரங்களில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் மூன்று விதமான தீபங்களை ஏற்றி வைத்து முருகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லாத நன்மைகள் உண்டாகும். அந்த மூன்று தீபம் என்னென்ன என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் ஏற்ற வேண்டிய தீபம் மாவிளக்கு தீபம். அதிலும் குறிப்பாக முருகப்பெருமானுக்கு பிடித்தமான தினை அரிசியை வைத்து மாவிளக்கு செய்து அதில் ஐந்து திரிகளை போட்டு நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த மாவிளக்கு தீபத்தின் பலனால் முருகப்பெருமானின் அருளோடு குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும்.
அடுத்ததாக நாம் ஆறு தீபங்கள் ஆறுமுகனுக்காக ஏற்ற வேண்டும். அந்த ஆறு தீபங்களில் மூன்று தீபங்கள் நல்லெண்ணெய் தீபமாகவும் மூன்று தீபங்கள் நெய் தீபமாகவும் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை முழு துவரம் பருப்பின் மேல் ஏற்றுவது என்பது அதீத பலனை தரும். கடைசியாக நாம் ஏற்ற வேண்டிய முருகப்பெருமானுக்குரிய தீபம் வெற்றிலை தீபம். ஆறு வெற்றிலைகளை எடுத்து சுத்தம் செய்து அதன் காம்புகளை நீக்கிவிட்டு சந்தனம் குங்குமம் வைத்து அந்த ஆறு வெற்றிலைகளையும் வட்டமாக பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபமேற்றி நாம் எடுத்து வைத்திருந்த வெற்றிலை காம்பை அந்த தீபத்திற்குள் போட்டுவிட வேண்டும்.
இப்படி தைப்பூச நாளன்று மூன்று வேளையும் இந்த மூன்று தீபங்களை ஏற்றி வைத்து “ஓம் சண்முகஹாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அவர்கள் வாழ்க்கையின் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர்வதோடு சொந்த வீடு அமைவதற்குரிய யோகமும் உண்டாகும். மேலும் தீய சக்திகளின் பாதிப்புகளில் இருந்து முற்றிலுமாக விலகி நல்ல சுகமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:ஆண்களிடம் பணம் சேர விதிகள்
தைப்பூசத் திருநாளன்று மேற்சொன்ன மூன்று தீபங்களை ஏற்ற இயலும் என்னும் பட்சத்தில் அது முருகப்பெருமானின் அருளால் மட்டுமே நிகழும். மூன்று தீபங்களையும் ஏற்ற இயலாவிட்டாலும் ஏதாவது ஒரு தீபத்தை மட்டுமாவது ஏற்றி முருகப் பெருமானின் அருளை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.