கொழு கொழுன்னு நல்லா குண்டா இருக்கிறவங்களுக்கு, உடல் எடை குறைந்து, அழகாக தோற்றத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு இந்த கொள்ளை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இந்த இட்லியை சாப்பிடலாம். வானம் பார்த்த பூமியில் கூட இந்த கொள்ளு விளையும். அரிசி விலையாத இடங்களில் இந்த கொள்ளு தான் சில பேருக்கு சாப்பாடாக இருக்கிறது. ஒரு காலத்தில் குதிரை தான் கொள்ளு சாப்பிடும் என்று நினைப்போம். ஆனால் குதிரை வேகத்தில் நாம் ஓடி ஓடி வேலை செய்ய வேண்டும் என்றால் கொள்ளு சாப்பிடலாம்.
சரி இப்போது ரெசிபியை பார்த்து விடுவோம். 1/2 கிலோ கொள்ளு வாங்கிக் கொள்ளுங்கள். (இந்த ரெசிபிக்கு கொள்ளு, தேவையான அளவு உப்பு, இந்த 2 பொருட்கள் மட்டும் தான் தேவை.) அதை முதலில் கல் இல்லாமல் சுத்தம் செய்து, நன்றாக தூசி இல்லாமல் புடைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த கொள்ளை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி விட்டு அப்படியே கிரைண்டரில் போட்டு ஆட்ட வேண்டும். கொள்ளு அரைபட்டு நுரைத்து பொங்கி உளுந்த மாவு போலவே நமக்கு கிடைக்கும். உளுந்து மாவு போலவே, பொங்க பொங்க இந்த கொள்ளையும் கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இதை ஆட்டும்போதே தெரியும். கொள்ளு நைசாக அரைபட்டு பொங்கி வந்தவுடன் அதில் உப்பு சேர்த்து இறுதியாக இரண்டு ஓட்டு ஓட்டி கொள்ளுமாவை கிரைண்டரில் இருந்து வழித்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். (இதை பிரிட்ஜில் வைத்து எல்லாம் ஸ்டோர் செய்ய முடியாது. அப்போதே இட்லி சுட்டு சாப்பிட்டு விட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து விட்டால் மாவு நீர்த்துப் போகும்.) இப்போது இட்லி சுடுவதற்கு கொள்ளு மாவு தயார். இதை புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. இதை அப்படியே இட்லி தட்டில் வார்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
முதலில் இட்லி பானையை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். மாவு வார்த்த, இட்லி தட்டுகளை இட்லி பானைக்குள் வைத்து மூடி இந்த இட்லியை 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இட்லி வெந்த உடன் இரண்டு நிமிடம் வெளியில் வைத்து நன்றாக ஆற வைத்து இட்லியை தட்டில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இட்லிக்கு உளுந்து வேண்டாம். அரிசி வேண்டாம். வெறும் கொள்ளை வைத்து செய்தால் இட்லி வருமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். குறைந்த அளவில் கொள்ளு வைத்து இந்த ரெசிபியை நீங்க முயற்சி செய்து பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு தெரியும்.
பாரம்பரியமாக கிராமப்புறங்களில் கொள்ளை தண்ணீரில் ஊற வைக்காமல் ஆட்டுக்கல்லில் போட்டு பொங்க பொங்க ஆட்டி எடுத்து அப்படியே இட்லி சுட்டு விடுவார்கள். நம்மால் ஆட்டுக்கல்லில் அரைக்க முடியாது. அதனால் ஊற வைக்காத கொள்ளை கிரைண்டரில் அரைத்துக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் மிக்ஸியில் ஆட்ட வேண்டும் என்று விரும்பினால் கொள்ளை ஐந்து, ஆறு மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கூட இட்லி வார்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.
இந்த இட்லிக்கு காரசாரமான காரச் சட்னி சுவையாக இருக்கும். அல்லது புளி சேர்த்து அரைத்த காரசாரமான சட்னி வைத்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களாக இருந்தால் மீன் குழம்பு கறி குழம்பு கூட வைத்து பரிமாறலாம். தேவைப்பட்டால் இந்த இட்லியில் கேரட் துருவல் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து இட்லியில் கொட்டி, தாளித்து இட்லி போலவும் சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். பாரம்பரியமான இந்த கொள்ளு இட்லி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.