கொண்டைக்கடலையில் இப்படி ஒருமுறை புலாவ் செஞ்சி சாப்பிட்டு பாருங்கள். யாரும் தட்டில் எதையும் ஒதுக்கி வைக்காமல் அனைத்தையும் ருசித்து சாப்பிடுவார்கள். இது மிகவும் சத்தானதும் கூட

kondaikadalai pulao recipe Tamil
- Advertisement -

இன்றளவில் பலரது வீடுகளிலும் புலாவ் என்பது விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. பொதுவாக புலாவ் என்றால் அதில் பல விதமான காய்கறிகளை சேர்த்து சமைப்பது வழக்கம். ஆனால் நாம் இந்த பதிவில் காய்கறிகளை சேர்க்காமல் வெறும் கொண்டைக்கடலையை மட்டும் வைத்து சத்து மிகுந்த புலாவை தயார் செய்ய போகிறோம். வாருங்கள் கொண்டக்கடலை புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப், வெள்ளை கொண்டை கடலை – அரை கப், பெரிய தக்காளி – 3, உரித்த சிறிய வெங்காயம் – அரை கப், பூண்டு – 8 பல், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தழை – அரை கட்டு, பச்சை மிளகாய் – 4, உலர்ந்த வெந்தய இலை – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – ஒரு அங்கல துண்டு, ஏலக்காய் – 1, இலவங்கம் – 2, பிரியாணி இலை – 2, கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் – 8, சீரகம் -. ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல்.

- Advertisement -

செய்முறை

முதலில் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசியை நன்றாக கழுவி, அரிசி மூழ்கும் அளவு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும். பிறகு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் அதில் அரிசியை போட்டு ஈரம் போகும் வரை வருக்க வேண்டும்.

ஊறவைத்த கொண்டைக்கடலையை 15 நிமிடம் குக்கரில் வேக வைக்க வேண்டும். பிறகு தக்காளியை 10 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு எடுத்து, அதன் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அதை வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பட்டை இலவங்கம், பிரியாணி இலை, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் அரிந்து வைத்திருக்கும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை சேர்க்க வேண்டும். ஒரு நிமிடம் வரை இவற்றை நன்றாக வதக்க வேண்டும்.இதற்கிடையில் மசாலா அரைப்பதற்கு எடுத்து வைத்திருந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அரைத்த விழுதை பச்சை மிளகாய் வெங்காயத்துடன் சேர்த்து மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தக்காளி விழுதை அதில் சேர்க்க வேண்டும். பிறகு வெந்தய இலை, உப்பு, கரம் மசாலாத்தூள் இவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையை சேர்த்து அத்துடன் 1 3/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி?

இந்த கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுப்பை குறைத்து வைத்துவிட்டு இறுக்கமான மூடியால் மூட வேண்டும். மூடிய பிறகு அதன் மேல் கனமான பாரத்தை வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு கொத்தமல்லி தழையை அதன் மேல் தூவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சிறிது நேரத்தில் சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடியாகிவிடும்.

- Advertisement -