கொத்து பரோட்டா பிடிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த கொத்து பரோட்டாவை போலவே, கொத்து சப்பாத்தி நம் வீட்டிலேயே சுலபமான முறையில் தயாரிக்கலாம்! மீந்து போன சப்பாத்தியை குப்பையில் எரியாமல், இது போல கொத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்க, இனி அடிக்கடி வேணும் என அடம் பிடிப்பாங்க. மீந்து போன சப்பாத்தியில் எப்படி சுவையான கொத்து சப்பாத்தி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
கொத்து சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – மூன்று, எண்ணெய் – மூன்று டீஸ்பூன், பூண்டு பல் – ரெண்டு, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – மூன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சோம்புத்தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தக்காளி – 2, மிளகுத்தூள் – அரை ஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.
கொத்து சப்பாத்தி செய்முறை விளக்கம்:
கொத்து சப்பாத்தி செய்ய முதலில் மூன்று சப்பாத்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு பல் பூண்டை எவ்வளவு குட்டியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு இஞ்சியும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நீங்கள் குட்டி குட்டியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இஞ்சி பூண்டு விழுது இருந்தாலும் இதற்கு பதிலாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை கிள்ளி சேர்க்க வேண்டும்.
இதனுடன் மூன்று பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வர வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வரும் சமயத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின் தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசாலா வாசம் போக லேசாக வதக்கி விடுங்கள். பிறகு பொடி பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கி விடுங்கள்.
வெங்காயம் தக்காளி மசிய வதங்கி எண்ணெய் தெளிய மேலே வந்ததும் நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து நன்கு பிரட்டி விடுங்கள். ரெண்டு நிமிடம் நீங்கள் இப்படியே வதக்கி விட்டால் சப்பாத்தி துண்டுகளுடன் மசாலா நன்கு ஊறிவிடும். பிறகு அரை ஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள் தூவி, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் கொத்து சப்பாத்தி சுவையாக, டேஸ்ட்டியாக சுலபமான முறையில் ரெடி!