எல்லோருடைய மன கஷ்டத்தையும், பிரச்சனைகளையும் இறக்கி வைக்கும் ஒரே இடம் கோவில் ஒன்றே ஆகும். எவ்வளவு துன்பங்கள் நம்மை துரத்திக் கொண்டிருந்தாலும், கோவிலுக்கு சென்று வந்தால் ஆத்ம திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் கோவிலுக்கு சென்று வந்தும் சிலருக்கு மனதிருப்தியும், முழு பலனும் கிடைப்பதில்லை! அதற்கு என்ன காரணம்? நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது தவிர்க்க வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
முன்பெல்லாம் நம் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் நம்மை சுற்றி நம்முடைய வீட்டிலேயே கூட்டு குடும்பமாக சொந்த பந்தங்கள் நிறைந்து காணப்படும். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் யாரிடம் நம்பி சொல்வது? என்று சிந்திப்பதே ஒரு பெரிய மனக்கவலையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வாக இருப்பது கோவில் தான்.
கோவிலுக்கு சென்று வந்தவுடன் எல்லா கஷ்டங்களையும் அவரிடம் இறக்கி வைத்து விட்டோம். இனி நமக்கு நல்லதே நடக்கும் என்று முழு திருப்தியோடு வீட்டிற்கு வருவோம். இப்படி முழு பலனையும் கோவிலுக்கு சென்று வந்த பின்பு நாம் அடைய வேண்டும் என்றால், கோவிலுக்கு செல்லும் முன் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
கோவிலுக்கு செல்லும் பொழுது நம் உடலில் பிராண சக்தி அதிகரிக்கிறது. இந்த பிராண சக்தியை ஈர்க்கக்கூடிய ஆற்றல் கர்ப்ப கிரகம் மற்றும் அதை சுற்றி உள்ள பிரகாரங்கள் அத்தனையும் பெற்றுள்ளன. அதனால் தான் அங்கு சென்றவுடன் நம் மனம் அமைதி பெறுகிறது. இந்த பிராண சக்தியை சில உணவு பண்டங்கள் குறைப்பதாக ஐதீகம் உண்டு.
அவ்வகையான உணவு பண்டங்களை தவிர்ப்பதன் மூலம் கோவிலுக்கு சென்ற முழு பலனை நாம் அடைய முடியும். நீங்கள் கோவிலுக்கு செல்லும் முன்னர் இந்த உணவு பண்டங்களை சாப்பிடாமல் இருந்தால் போதும். அதில் மிகவும் முக்கியமான ஒரு உணவு பொருள், வெங்காயம். வெங்காயம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றால் உங்களுக்கு முழு திருப்தி கிடைக்காது.
வெங்காயம் மட்டும் அல்லாமல் பூண்டு, பச்சை மிளகாய், கத்திரிக்காய் மற்றும் இறைச்சி ஆகியவையும் இதில் அடங்கும். இந்த ஐந்து உணவுப் பொருட்களை தவிர்த்து விட்டு நீங்கள் கோவிலுக்கு செல்வதன் மூலம் பிராண சக்தியை அதிகரித்து முழு பலனையும், திருப்தியையும் அடைய முடியும்.
இதையும் படிக்கலாமே:
கேட்ட வரம் கிடைக்க முருகர் மந்திரம்
பொதுவாகவே வீட்டில் பூஜை செய்யும் பொழுது வெங்காயம், பூண்டு போன்றவற்றை தவிர்ப்பது வழக்கமாகக் கொண்டுள்ளோம். அது போல தான் இதுவும். வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய், மாமிசம் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் பிராண சக்தி அதிகரிப்பதில்லை, இதனால் அவை சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமல் அசௌகரியத்தை உணரக்கூடும். இந்த ஐந்து பொருட்களை தவிர்த்து விட்டு முழு மனதோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து பிரார்த்தித்து வந்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும், அது மட்டும் அல்லாமல் முழு பலனும் கிடைக்கும்.