கோவிலுக்கு சென்று வருவதால் நிம்மதியும், ஆத்மதிருப்தியும் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், நேர்மறை எண்ணங்களாக மாறிவிடுகிறது. கோவிலுக்கு செல்வதன் மூலம் அங்கு நிலவும் இறைசக்தியை நம்மால் உணர முடியும். அதன்மூலம் நேர்மறை ஆற்றலை பெறமுடியும். இவ்வாறான சிறப்பு அம்சங்கள் பொருந்திய கோவில்களுக்கு சென்று வரும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கோவில்களுக்கு செல்லும் முன்னர் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கும்பிட்ட பிறகு தான் செல்ல வேண்டும்.
அதேபோல் கோவிலுக்கு செல்லும்போது இறைவனுக்கு சாட்டுவதற்காக நீங்கள் கொடுக்கும் மலரினை கடைகளில் வாங்கிக் கொடுக்காமல், உங்கள் கைகளினாலே கட்டிக்கொடுத்தால் அதன் மூலம் மிகுந்த பலன் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்லும் பொழுது கால்களை கழுவி கொண்டும், தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டும் தான் உள்ளே செல்ல வேண்டும். ஏனென்றால் கால்களின் வழியாக தான் அங்குள்ள இறையாற்றல் உடலுக்குள் செல்வதாக கருதப்படுகிறது.
கோவிலுக்கு செல்லும் பொழுது எப்போதும் ஈரத்துணியை உடுத்திக் கொண்டு செல்லக்கூடாது. சில முக்கியமான சாங்கியங்கள் செய்யும் பொழுது மட்டுமே ஈரத்துணியுடன் இருக்க வேண்டும். இதற்கு பல காரண காரியங்கள் இருக்கின்றன.

அதேபோல் கோவிலுக்கு சென்று வரும்போது தானம் செய்வதை விட கோவிலினுள் நுழையும் முன்னரே தானம் செய்துவிட்டு செல்லவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மனநிறைவு கிடைக்கிறது. எனவே தெளிந்த மனதுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட முடியும்.
கோவிலுக்கு சென்று வரும் பொழுது வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ஏனென்றால் கோவிலினுள் நம்மை சூழ்ந்து கொண்ட நேர்மறை ஆற்றல், நாம் எங்கு செல்கின்றோமோ அந்த இடத்திலேயே நிலை கொண்டு விடும்.

கோவிலுக்கு சென்று வந்த உடனேயே கால்களை கழுவுவது அல்லது குளிப்பது போன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் நீங்கள் கொண்டு வந்த அதிர்ஷ்டத்தை இவ்வாறு செய்வதன் மூலம் இழக்க நேரிடும்.
அதேபோல் கோவிலுக்கு செல்லும் போது தலைவாசல் வழியாகத் தான் செல்லவேண்டும். திரும்பி வரும்பொழுது புற முதுகு காட்டி வருவதை தவிர்க்க வேண்டும். இறைவனை பார்த்தவாறே வெளிவர வேண்டும்.
கோவில்களில் கொடுக்கும் பிரசாதமான திருநீரூ, குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற எவற்றையும் வீணாக்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் கோவில்களுக்கு சென்று வரும் பொழுது ஏதேனும் ஒரு அன்னத்தை தானமாக கொடுத்திடல் வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் உங்களது வேண்டுதல் முழுமை பெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இனி கோவிலுக்கு செல்லும்போது இவ்வாறான விஷயங்களை முறைப்படி பின்பற்றி இறைவனின் பரிபூரண அருளை பெறுங்கள்.