ரொம்பவே சிம்பிளான அதேசமயம் சத்தான குடைமிளகாய் சட்னி

kudaimilagai chutney
- Advertisement -

டிபன் ஐட்டங்கள் என்று நாம் பலவிதமான உணவு வகைகளை தயார் செய்தாலும் அதற்கு தொட்டுக் கொள்வதற்கு வித்தியாசமான முறையில் சட்னி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட சட்னியை மிகவும் சத்துள்ள சட்னியாக செய்தால் மிகவும் சந்தோஷமாக மன நிறைவுடன் இருப்போம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் குடைமிளகாயை வைத்து எப்படி சட்னி செய்வது என்று பார்ப்போம்.

குடையின் மிளகாயில் விட்டமின் சி, ஏ, இ, பி6 போன்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும் இளமையை தக்க வைத்துக் கொள்வதற்கும், மூட்டுவலி பிரச்சினைகளை தடுப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கும் குடைமிளகாய் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சூரிய கதிர்களால் ஏற்பட்டிருக்கும் கருமையை நீக்குவதற்கும் குடைமிளகாய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குடைமிளகாயை வைத்து சட்னி செய்வதை பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • குடைமிளகாய் – 1
  • உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • புளி – சிறிய துண்டு
  • பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். குடைமிளகாய் வதங்கிய பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதே கடாயில் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

உளுந்து பொன்னிறமான பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய் வதங்கிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அவ்வாறு வதக்கும்பொழுது தேவையான அளவு உப்பையும் சேர்த்து விட வேண்டும். பிறகு ஒரு சிறிய துண்டு அளவு புளியை அதில் சேர்த்து கால் ஸ்பூன் பெருங்காய தூளையும் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கருவேப்பிலையை சேர்த்து கொத்தமல்லி இலைகளையும் தூவி லேசாக வதக்கி விட்டு அப்படியே இறக்கி வைத்து விட வேண்டும். இப்பொழுது நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் குடைமிளகாயையும் இதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஆற விட வேண்டும். ஆறியபிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சட்னியாக நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை தாளிப்பதற்கு தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சூப்பரான வாழைப்பூ கோலா உருண்டை ரெசிபி

சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அப்படியே நாம் கொடுப்பதன் மூலம் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அதற்கு பதிலாக இப்படி சட்னிகளாக செய்து கொடுப்பதன் மூலம் அதன் பலனை பெற முடியும்.

- Advertisement -