மீதமான இட்லியில் இப்படி ஒரு அல்வாவா! இதை எப்படி செய்வது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?

halwa

மீதமான இட்லியை வைத்து ஒரு சுவையான அல்வாவை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீதமான இட்லியில், இட்லி உப்புமா, இட்லி சில்லி, இட்லி பக்கோடா என்று வித்தியாசமாக பல கார உணவுகளை நாம் தயார் செய்தாலும், இன்று நாம் பார்க்கப் போகும் இந்த அல்வா கொஞ்சம் வித்தியாசமானது. இதை செய்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறி பாருங்கள். இதை எதில் செய்தீர்கள் என்று, உங்கள் வீட்டில் இருப்பவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு ருசியுள்ள ஒரு ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

halwa1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மீதமான நான்கு இட்லியை போட்டுக்கொள்ளுங்கள். கூடவே ஏலக்காய் 5, பால் 1/2 டம்ளர், தண்ணீர் 1/2 டம்ளர், ஊற்றி இட்லியை நன்றாக மொழுமொழுவென மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

ஒரு தடிமனான கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி முதலில் 10 முந்திரிப்பருப்பை உடைத்துப் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது முந்திரி வறுத்த அதே கடாயில், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இட்லியை ஊற்றி, கைவிடாமல் கிளற வேண்டும். கடாயில் இருக்கும் கலவையானது 3 நிமிடத்தில் கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வரும்.

naattu-sarkarai

அந்த சமயத்தில் ஒரு 100 கிராம் அளவு நாட்டுச் சர்க்கரையை கடாயில் இருக்கும் இட்லி விழுதோடு சேர்த்து, நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். கைவிடாமல் கிளற வேண்டும். 4 டேபிள் ஸ்பூன் அளவு நெய்யை ஊற்றி கைவிடாமல் கிளற தொடங்குங்கள்.

ஒரு 15 நிமிடங்கள் இந்த அல்வாவை கடாயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் போதும். இது உருண்டு சுருண்டு திரண்டு ஒரு அல்வா பதத்திற்கு வந்தவுடன் இதன் மேலே வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பை தூவி பரிமாறுங்கள். அசல் அல்வாவின் சுவை தோற்றது. அந்த அளவிற்கு ஒரு சுவை இதில் இருக்கும்.

halwa2

இந்த அல்வாவில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசத்துடன் இருக்கும். நாட்டுச் சர்க்கரையை பயன்படுத் தினால் அதனுடைய சுவை கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுடைய வீட்டில் மீதமான இட்லி இருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.